இலங்கைசெய்திகள்

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு- இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் சுமந்திரன் எம்.பி.!!

Sumanthiran MP

“இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் எந்த விதத்திலும் போதாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோல் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என இம்மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் போதும் என இந்தியா ஏற்கவில்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button