ஒரு ஊரில் ஒரு வயதான தையல்காரர் வாழ்ந்து வந்தார். தையல் வேலைப்பாட்டில் அவர் வித்தகராக இருந்ததால் அதிக வாடிக்கையாளர்கள் அவரை நாடி வந்தனர், அதனால் நல்ல காசும் சம்பாதித்து விட்டார்.
ஒரு நாள் ஒரு ஏழை யாசகன் அவரிடம் வந்து சொன்னார்:
உங்கள் தொழில் திறமையால் நிறைய பணம் சம்பாதிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு உதவக்கூடாது?
ஊரிலுள்ள இறைச்சிக்கடைக்காரரை பாருங்கள்! பெரிய பணம் இல்லை, ஆனாலும் நாளாந்தம் ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குகிறார்.
ஊரிலுள்ள காய்கறிக்கடைக்காரரை பாருங்கள்! பெரிய பணம் இல்லை, இருந்தாலும் ஏழைகளுக்கு முடியுமான அளவு கொடுத்துதவுகிறார்.
ஊரிலுள்ள பால்காரனைக்கூட பாருங்கள்! பெரிய பணம் இல்லை, இருந்தும் ஒரு தொகை பாலை இல்லாதவர்களுக்கு தர்மம் செய்கிறார்.
உங்களுக்கு என்ன குறை? எதுவும் கொடுப்பதாக தெரியவில்லையே! என்றார். எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு அமைதியாக அவர் வேலையை தொடர்ந்தார்.
கடுப்பாகிய ஏழை யாசகன், இடத்தை காலி செய்தான். ஊரின் மூலை முடுக்கெல்லாம் சென்று ‘குறித்த தையல்காரர் நல்ல பணக்காரர். ஆனால் கஞ்சன், எதுவும் கொடாதவன் என்று பரப்பிவிட்டார். ஊர் மக்களும் அவரை தப்பாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
காலங்கள் உருண்டோடின. வயதான தையல்காரர் நோய்வாய்ப்பட்டார். ஊரவர்கள் யாரும் நோய் விசாரிக்கக்கூட வராத நிலையில் மரணித்துவிட்டார்.
அவர் மரணத்தோடு இறைச்சிக்கடைக்காரர், காய்கறிக் கடைக்காரர், மற்றும் பால்காரர் எல்லோரும் தானமாக வழங்குவதையும் நிறுத்திவிட்டனர்.
இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது, எங்களுக்கு தையல்காரர் நாளாந்தம் பணம் தருவார். ஏழை எளியவர்களுக்கு எங்களிடம் உள்ள அத்தியாவசியப் பொருள்களை கொடுக்கும் படி சொல்லுவார்’ என்று பதில் அளித்தனர்.
சிலர் உன்னை தப்புக்கணக்கு போடுவார்கள்.
சிலர் உன்னை பனிக்கட்டியை விட பரிசுத்தமாக பார்ப்பார்கள்.
அவர்களால் உனக்கு தீமை நடக்கவும் போவதில்லை.
இவர்களால் நன்மை நடக்கவும் போவதில்லை.
உன்னைப் பற்றி நீயும் உன் இறைவனும் தெரிந்தது வைத்துள்ளதே உனக்கு முக்கியம்.
மேலோட்டமாக பார்த்து, யாருக்கும் தீர்ப்பு வழங்க முற்படாதே!
நீ விட்டுச் செல்லும் சுவடுகளை நீ மறைத்தாலும் காலம் காட்டிக் கொடுக்கும்.