இலங்கைசெய்திகள்

தாய்நாடு திரும்புவோர் சொந்த மண்ணில் குடியமர்த்தப்படுவர். டக்ளஸ் தேவானந்தா!!

srilanka

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் இந்த சந்திப்பு இன்று (26) இடம்பெற்றதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் கடற்றொழிலாளர்களின் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அழைத்துவரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் வாழ்க்கைச் செலவிற்கான நிதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையினால் ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் தொடர்பாகவும் மாற்றுத் தொழில்முறைகளை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராயுமாறு பிரதி உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button