இவ்வருடத்தில் இலங்கையில் குடும்பமொன்றிற்கான மாதாந்தச் செலவானது 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கையை மேற்கோள்காட்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 63,820 ரூபாவாக இருந்ததாகவும் உணவுக்காக மாதந்தோறும் 40,632 ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 35,492 ரூபாய் ஆகும்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் 60 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளது.
பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட இருபது வீத மக்களின் வருமானம் ஐம்பது வீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
உணவு அல்லாத தேவைகளுக்காக செலவிடப்படும் பணத்தில் 23 வீதம் கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு 14 வீதமும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக 15 வீதமும், எரிபொருளுக்கு 13 வீதமும், ஆடைகளுக்கு 10 வீதமும், போக்குவரத்துக்கு 6 வீதமும் செலவிடப்படும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.