“எரிவாயு தொடர்பான பிரச்சினை முழு நாட்டுக்காமான பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் அரசு அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பாரியளவிலான பிரச்சினைகளை, நாட்டை ஆட்சி செய்பவர்கள் மறந்துவிட்டு செயற்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் நீண்டவரிசையில் காத்திருக்கும் யுகம் காணப்பட்டது.
குறித்த காலப்பகுதியில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உருவாக்கிய பொருளாதார முறைமைக்கு அமைவாக ஒரு கிலோகிராம் அரிசியை வாங்கிக்கொண்டு நடமாட முடியாத நிலைமையே காணப்பட்டது.
உணவுப்பொருட்களுக்குத் தடைவிதித்தனர். குறிப்பாக ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. வாகனங்களுக்கு டயர்களை வாங்கிக்கொள்ள முடியாது.
இந்நிலையில், அவரது ஆட்சி முறைமைக்கு வரலாறு நல்ல ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அதிக பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு இந்த நாட்டை ஆள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகியுள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் யுகம் தற்போது உருவாகி, அது சாதாரண ஒருவிடயமாக மாறிக்கொண்டுச் செல்கின்றது.
மஞ்சள் தூள், பால்மா, சீனி, இரண்டு கிலோகிராம் அரிசி என்பவற்றுக்கு இன்று நீண்டவரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகியுள்ளது.
பொருட்களை விலைக்கு வாங்கக் கூடியவர்களுக்கு பல்பொருள் அங்காடிகள், வியாபார நிலையங்களுக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாதளவு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று எமது நாட்டில் பொருளாதாரம் 1970 களுக்கு மீண்டும் சென்றுள்ள நிலைமையைக் காணமுடிகின்றது.
இது இவ்வாறிருக்க புதிததாக எரிவாயு சிலிண்டர் பிரச்சினை உருவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது அரசு பல காரணங்களைக் கூறியது.
எரிவாயு தொடர்பான பிரச்சினை முழு நாட்டுக்காமான பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் அரசு அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றது” – என்றார்.
செய்தியாளர் – சுடர்