திருகோணமலை மாவட்டத்தில் விசமிகளால் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கண்டித்து இன்று(22) திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மீனவ சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கருத்திற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பன்டிகோராளவின் ஏற்பாட்டில் இதுதொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தடைசெய்யப்பட்ட சுறுக்கு வலை மற்றும் டைனமைட் பாவனை காரணமாக மீன்வளம் அழியக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். துறைசார் அதிகாரிகள் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் ஒரு சில விசமிகள் சூட்சகமான முறையில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் இதன்போது வேண்டிக்கொண்டனர்.
இதற்கிணங்க இன்று முதல் இரண்டு வாரங்கள் வரை சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்த விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. முப்படை மற்றும் பொலிசார், உரிய திணைக்கள தலைவர்கள் இணைந்து இச்சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் உரிய பிரதேசங்களில் மீனவ சங்கங்களை இது தொடர்பில் தெளிவுபடுத்துவதெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை உரிய தரப்பினரிற்கு வழங்குமாறும் இதன் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வேண்டிக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கடற்படை, பொலிஸ் ,உரிய திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஏ.ஜே.எம்.சாலி திருகோணமலை