செய்திகள்விளையாட்டு

ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான்!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனி உள்பட கிரிக்கெட்டை சுவாசித்த அனைவருமே தமிழ்நாட்டின் அதிரடி வீரர் ஷாருக்கானை கண் சிமிட்டாமல் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்.

காண்போரை பரபரப்பாக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருந்தது ஐசிசி உலகக்கோப்பையோ, ஐபிஎல் இறுதிப்போட்டியோ அல்ல… அது சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதியாட்டம்.

டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் அணியின் வெற்றி ஷாருக்கானை நம்பித்தான் இருந்தது. கர்நாடகாவுக்கு எதிரான சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு வெற்றிபெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன.

கர்நாடகாவின் வேகப்பந்து வீச்சாளர் ப்ரதீக் ஜெயின் என்ன செய்வார் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ப்ரதீக்கை விட போட்டியை ரசித்துக் கொண்டிருந்தோரின் இதயம் வேகமாக துடித்திருக்கக்கூடும்.

ப்ரதீக் லெக் திசையில் ஃபுல்லர் வீசிய பந்தை, அலேக்காக டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஷாருக்கான். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஷாருக்கான், தமிழ்நாடு அணி 3வது முறையாக சையது முஸ்தாக் அலி கோப்பையை தட்டிப்பறிக்க முக்கிய காரணமானார்.

3 சிக்சர்கள், 1 பவுண்டரி என 33 ரன்கள் குவித்து கர்நாடகாவின் கனவை தகர்த்த ஷாருக்கான்தான் இப்போது இந்திய கிரிக்கெட்டின் ஹாட் டாபிக்

“எல்லாவற்றையும் எளிமையாக கையாளவே விரும்பினேன்.. லாங் ஆனில் ஷாட் அடிக்க காத்திருந்தேன். ஆனால் ஸ்கொயர் லெக்கில் ஷாட் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு அணி என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. கடைசி பந்தில் சிக்சர் விளாசியதை வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்ப்பேன்..” என போட்டிக்குப் பின்னர் கூறினார் ஷாருக்கான்.

யார் இந்த ஷாருக்கான்?

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஷாருக்கான், 2013ல் விஜய் ஹசாரே தொடர் மூலம் தமிழ்நாடு அணியில் அறிமுகமானார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை நிரூபித்ததன் மூலம் 2018ல் புகழ்பெற்ற ரஞ்சி தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

உயரமான வலது கை பேட்ஸ்மேன் என்பதால் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக வலம் வந்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டாலும் நாலாப்புறமும் ஷாட் அடிப்பதில் இவர் கெட்டிக்காரர்.

முகவரி தந்த சையது முஸ்தாக் அலி கோப்பை

கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஸ்தாக் அலி தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே களம் கண்ட ஷாருக்கான் அனைத்திலுமே கேம் சேஞ்சராக திகழ்ந்தார். தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி, அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார்.

4 இன்னிங்சில் 88 ரன்கள் மட்டுமே விளாசியிருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 220ஐ எட்டியிருந்தது. இதுதான் அவருக்கான முகவரியை கொடுத்தது. டெத் ஓவர்களில் எதிரணியை பொலந்து கட்டுவதில் கில்லி எனும் பெயர் பெற்ற ஷாருக்கானுக்கு கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது.

ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டிக்குப் பிறகு 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து ஆச்சரியப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான் 153 ரன்களை குவித்தார். உடற்பயிற்சியில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதும் போட்டியை எளிமையாக அணுகுவதே ஷாருக்கின் பாணி.

ஐபிஎல் தொடரின் போது எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களோடு கலந்துரையாடி அவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும் ஷாருக்கான் தவறவில்லை.

ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான் வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் ஷாருக்கான் உள்பட தமிழ்நாடு அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம்பிடிப்பாரா?

கடைசி பந்தில் சிக்சர் விளாசிய ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் பிரகாசமான வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஷாருக்கான் பெரும்பாலும் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடியுள்ளார்.

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்திற்கு பலரும் சோதனை முயற்சியில் களமிறக்கப்பட்டனர். இன்று வரை அந்த இடத்திற்கு நிரந்தரமான வீரர்களை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போதைய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் மிடில் ஆர்டரில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்க பந்தயத்தில் இறங்கியுள்ளனர். இப்போது அப்போட்டியில் ஷாருக்கானும் இணைந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button