பாடசாலை நடைபெறுமா, இல்லையா என்பது குறித்து மக்களிடம் குழப்பநிலை இருக்க, கிழக்கு.மேல் மாகாணங்கள் பாடசாலை நடைபெறாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தன.
வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை நடைபெறும் என அறிவித்திருந்த போதும் ஊரடங்கு காலை 7.00 மணிக்கு எடுத்து மீண்டும் பி.ப 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் நிலையில் கிராமப்புற. நகர்ப்புற மாணவர்கள் பாடசாலைகளுக்கு வந்து வீடு செல்வதற்கான நேரம் போதுமானதாக இல்லை.
அமைச்சரவை கலைக்கப்பட்டால் மாகாண கல்வி அமைச்சர்களுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையில் வடமாகாணம் பின் தங்கிய நிலையில் உள்ளமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்க கூடியது என்றாலும் பாடசாலை நடைபெறும், நடைபெறாது என்று அறிவிப்புகள் பெற்றோர்கள் மத்தியில் குழப்ப நிலையையே ஏற்படுத்தியுள்ளது.
அறிவிப்புகள் தீர்மானமாக இல்லாதது இலங்கையின் ஆட்சி நிலை திரிசங்கு நிலையில் இருப்பதைப் போலவே உள்ளது என பெற்றோர்கள் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
தூர இடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், வாகனங்களில் செல்லும் மாணவர்களின் நிலை, என்பன யோசிக்க வேண்டிய விடயமாகும்.
சில நாட்களாக எரிபொருள் வழங்கப்படாமையினால் உடனடியாக பாடசாலை செல்வதென்பது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.
வருங்காலங்களில் இவ்வாறான முடிவுகளை அனைத்து தரப்பினரும் கலந்து ஆலோசித்து எடுப்பதே பயன்மிக்கதாக இருக்கும் என்பதை பெற்றோர்களின் ஒருமித்த குரலாக கூறிக்கொள்கின்றோம்.