“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும்.”
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேசிய இனப்பிரச்சினையால் சிங்கள மக்களைவிட வடக்கு, கிழக்கு தமிழ் – முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் – முஸ்லிம்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் இன முறுகலை ஏற்படுத்தி சிங்களக் கடும் போக்குவாதிகள் நாட்டின் அரசியலை முன்னெடுத்த கடந்த வரலாற்றை நாம் மறந்திடலாகாது.
தமிழ், முஸ்லிம் மக்கள் இனத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். அதனால்தான் நாம் இரு இனத்தவர்களையும் தமிழ்பேசும் மக்கள் என்று அழைக்கின்றோம். அதேபோல்தான் வடக்கு – கிழக்கைத் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தி வருகின்றோம்.
எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாய தேவையாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் – முஸ்லிம் மக்கள் கடந்தகாலத் துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிட்டு தீர்வை வென்றெடுக்க ஓரணியில் பயணிக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்