இலங்கைசெய்திகள்

வெளிப்படையான விசாரணை வேண்டும்! – சமுதிதவுக்குச் சஜித் ஆதரவுக் குரல்

“சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் இழிவான தாக்குதலுக்கு இணையானதாக வெறுப்புடன் நாங்கள் கண்டிக்கின்றோம்.”

-இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இணைந்து அவரது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, இவ்விடயத்தில் அவருக்கு எமது மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்புகின்றோம் என்பதோடு அவருக்குத் தேவைப்படும் உதவிகளை தயக்கமின்றி வழங்குவோம் என்றும் குறிப்பிடுகிறோம்.

அவமானகரமான குண்டர் குழுவின் தாக்குதல் குறித்து வெளிப்படையாக, பாரபட்சமற்ற, நியாயமான விசாரணையை நடத்தி, இதனுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

கருத்துச் சுதந்திரமானது அனைவரதும் உரிமையாகும் என உலக மனித உரிமைகள் பிரகடனம் மூலமும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம் மூலமும், மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனம் மூலமும் எங்கள் நாட்டு அரசியல் யாப்பின் மூலமும் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அது எவ்வாறான சூழ்நிலையிலும் புறக்கணிக்கப்பட முடியாது என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஊடக சுதந்திரம் என்பதால் கருதப்படுவது யாதெனில் விமர்சிப்பது மற்றும் அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதற்குள்ள சுதந்திரத்தையாகும் என ஜோஜ் ஓவல் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் நான்காவது அரசாகக் கருதப்படும் ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் மீது எந்தவிதமான தணிக்கையையும் விதிக்க முடியாது. விதிக்க முடியுமான ஒரே ஒரு தணிக்கையானது சுய தணிக்கையாகும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கும் இது பொருந்தும் என்பதால் ஊடக சுதந்திரத்துக்காகப் போராடும் அனைவருடனும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி நாம் அவர்களுடன் கைகோர்க்கின்றோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button