“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடுவதற்குக் கால அவகாசமே கோரியுள்ளோம்.”
- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்பேசும் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் கையொப்பமிடுவதில் முஸ்லிம் கட்சிகளிடையே எழுந்துள்ள பின்னடிப்புக் குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் கடித வரைவின் விடயங்களுடன் 75 முதல் 80 வீதம் வரை எமது கட்சி இணங்குகின்றது. ஆனாலும், அதில் நாம் இணங்க மறுக்கும் சில விடயங்கள் குறித்து தமிழ்க் கட்சிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
குறிப்பாக சில விடயங்களில் தமிழர் என்று குறிப்பிடப்படும் விடயங்களில் தமிழர் – முஸ்லிம் என்று வர வேண்டும் எனக் கூறியுள்ளோம். எனினும், சிறுபான்மை மக்களான தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் காணிகளைச் சிங்களவர்கள் அபகரிப்பது போன்று எமது (முஸ்லிம்) மக்களின் காணிகளும் அபகரிக்கப்படுகின்றன. சிறுபான்மைக்குள் சிறுபான்மையினரான எமது நலன்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
13ஐ நடைமுறைப்படுத்தக் கோரும் கடிதத்தில் கையொப்பமிடுவது தொடர்பில் எமது கட்சியின் உயர்பீடம் கூடி எடுக்கும் முடிவுக்கு அப்பால் மக்களின் கருத்துக்களை நாம் அறிய விரும்புகின்றோம். புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்று அவர்களின் ஆலோசனைகளின்படியே நாம் செயற்படுவோம். எனவே, அவர்களிடம் கருத்துப் பெறுவதற்காக சில நாட்கள் கால அவகாசத்தையே கோருகின்றோம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்