தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்றைய தினத்திற்குள் தமது பதவி விலகல் கடிதத்தினை கையளிப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தமது பதவியில் இருந்து விலகியிருந்தார்.
மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்த விசாரணைகள் நிறைவுறும் வரையில், தமது பதவியில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அறிவித்திருந்தார்.
மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சந்தேகநபர்கள், தென்னை, கித்துல், பனை செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.