நேற்று இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, சித்திர பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெறாமை தொடர்பில் கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா தக்ஸிலா வித்தியாலயத்தில் ஒரே மண்டபத்தில் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு குறித்த வினாப்பத்திரம் வழங்கப்படவில்லையென அந்த மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்திர பாடத்தின் முதலாவது பாகத்தினை நிறைவு செய்ததன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான வினாப்பத்திரத்தினை கோரிய போது, அது தமக்கு கிடைக்கப்பெறவில்லையென பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் கூறியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பரீட்சை நிறைவுற்றதன் பின்னர், பரீட்சைக்கு தோற்றிய ஏனையவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் தாம் வினவிய போது, அவர்களுக்கு சித்திர பாடத்தின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெற்றதாக கூறியதாகவும் மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், கம்பஹா வலயக் கல்வி பணிப்பாளர் அநுர பிரேமலாலிடம் எமது செய்தி சேவை வினவிய போது, இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் ஆலோசனையின் அடிப்படையில், குறித்த பரீட்சை மண்டபத்தின் தலைமை மேற்பார்வையாளர் மற்றும் உதவி மேற்பார்வையாளர் ஆகியோர் பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பஹா வலயக் கல்வி பணிப்பாளர் அநுர பிரேமலால் குறிப்பிட்டார்.
இதேவேளை, பத்தேகம பாடசாலை ஒன்றில் பரீட்சை நிறைவுப்பெறும் காலத்திற்கு முன்னதாகவே விடைத்தாள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.