நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, காலை 8.30 முதல் இரவு 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மாத்திரம் 3 மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
உயர் தரப்பரீட்சை இடம்பெறும் காலை 8.30 முதல் 11.30 வரையிலும், பிற்பகல் 1.30 முதல் 4.30 வரையான காலப்பகுதியிலும் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால், அதற்காக இரவு நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது.
எனினும், இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெப்டா கிடைக்கப்பெறாவிடின் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று இரவு 7.30 முதல் இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் தேசிய கட்டமைப்பில் இருந்து 165 மெகாவோட் மின்சாரம் இழக்க நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.