மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார்.
புத்தளம் நகரத்தில் கள மேற்பார்வையை மேற்கொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இத்திட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;
இதற்கமைய மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணியாமல் செல்வோர், மூன்று பேரை ஏற்றிச் செல்வோர், சட்டத்துக்கு முரணாக வாகனத்தை செலுத்துவோர் போன்றோரின் படத்தை, நாலக டி சில்வாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றப்படும்.
அப்படத்தில் காணப்படும் வாகனத்துக்கு (வாகன இலக்கம் உரியமையாளருக்கு) எதிராக, பொலிஸ் வாகன போக்குவரத்துப் பிரிவால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களின் ஒத்துழைப்புடன் முறைகேடாக வாகனம் ஓட்டுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் வாகன, வீதி விபத்துகளை தவிர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.