சொற்கள் தொலைத்த
பாலைவனப்பயணி நான்.
காற்று அளைகிறது என்னை
தொலைவானக் கனாக்கள் நிறைந்த என்
பூர்வக்குடிகள் தேடி
நெடும்பயணம் நடக்கிறேன்.
பால் நிலவு எறிக்கும்
ஜாமத்தின் இரவு கூட வருகிறது.
வனங்களின் நாகரீகத்தில் பிறந்த
என் மூதாதைகளின் புலம்பல் ஒலி கேட்கிறது.
அவர்கள் எங்கேனும் இருக்கக்கூடும்.
இது ஆன்மம் தீரா உலகம்
அதிபயங்கர அசரீரியுடன் புகை மண்டிய
போர்களின் காலம் கண்ணில் விரிகிறது.
தனித்தலையும் என்னிடம்
ஓர் எறிகல்லைத்தவிர ஏதுமில்லை.
வீரத்தின் சுவடு என் மரபணுக்களில்
நிறைந்திருக்கலாம்.
தூங்கிக்கிடக்கும் மனக்காட்டில்
மிருகமொன்று விழித்தெழுகிறது – அது
மூதாதைகளின் படிமம்
மக்கிக்கிடக்கும் உடலாயிருக்கக்கூடும்.
கோரப்பற்கள் நீட்டியபடி இருக்கிறது
வீரத்தின் தாகம் தீர்க்கா அநாமதேயத்தின் கோடுகள்.
கண்களில் மிரட்சியோடு கடக்கின்றன
பிணந்தின்னும் கழுகுகள்
பாலைவனங்கள் கடக்கிறேன்…
அதோ தெரிகிறது பூர்வக்குடிகளின்
மக்கிப்போன கலசங்கள் .
வீழ்ந்து கிடக்கும் சிவப்புக்குடித்த கொடியிலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கின்றன
தொன்மங்களின் சொற்கள் .
இது அசரீரிகளின் இரவாயிருக்கக்கடவதென சாபமிட்டேன்.
Leave a Reply