- தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுங்கள். உடலுக்குள் இருக்கும் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்ள விரும்பும்.
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களுக்குத் தேவையான அளவைவிட குறைவான அளவே நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைக, தானியங்கள் ஆகியவை நலம்தரும் பாக்டீரியாக்களுக்கு செழிப்புடன் இருக்க உதவும்.
- அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் இருக்கும் உட்பொருட்கள் நன்மைதரும் பாக்டீரியாக்களை அழித்து தீங்கு தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
- நுண்ணுயிரிகளை கொண்டுள்ள ‘ப்ரோபயாடிக்’ உணவுகளை உட்கொள்ளுங்கள். கேஸ்ட்ரிக் அமிலம், பித்த நீர், கணையம் சுரக்கும் நீர் உள்ளிட்டவற்றைக் கடந்து போதிய எண்ணிக்கையில் குடலைச் சென்றடையக்கூடிய உணவுகளே ப்ரோபயாடிக் உணவுகள் என்று வகைப்படுத்தப்படும் என 2001ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை வரையறை செய்துள்ளன.
- பிற கொழுப்பு சத்துகளை விடவும் அதிகம் பதப்படுத்தப்படாத எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்கள் நுண்ணுயிர்களுக்கு நன்மை பயக்கும் பாலிஃபீனால்களைக் (polyphenols) கொண்டிருக்கும்.
- ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா என அனைத்தையும் கொல்லும். எனவே நீங்கள் ஆன்டிபயாடிக் உட்கொள்ள வேண்டிய தேவை இருந்தால், உங்கள் உடலில் நுண்ணுயிரிகள் மீண்டும் செழித்து வளரத் தேவையான உணவுகளை நிறைய உட்கொள்ளுங்கள்.
உங்கள் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் காற்று வெளியேறுதல், வயிறு பெருத்தல் உள்ளிட்டவை நடக்கலாம். அதிகமாக நீர் அருந்துதல், உணவு முறையில் செய்யும் மாற்றத்தைப் படிப்படியாகச் செய்தல் உள்ளிட்டவை அவற்றைத் தடுக்க உதவி செய்யும்.