பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ரொக்கெட் ஏவுத்தளத்திருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது.
சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கிலோமீற்றர்) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில், சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கிலோமீற்றர்) தொலைவில் பயணிக்கும், இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும்.
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.
நாசா விண்கலம் பார்க்கர் சோலார் ஒரு வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து உள்ளது. இதுகுறித்து நாசா, சூரியனின் வளிமண்டலத்தில் நுழைவது ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று நினைத்ததை இப்போது செய்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.
நாசா கூற்றுப்படி, விண்கலம் ஏப்ரல் 28 அன்று சுமார் 2 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பமான சூரியனின் வளிமண்டலத்தில் வெற்றிகரமாக நுழைந்தது.பார்க்கர் சோலார் புரோப் வெற்றிகரமாக சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது.
தற்போது பிரபஞ்சத்தின் பல கிரகங்கள் மற்றும் நிலவுகள் தொடர்பான பல அரிய உண்மைகளை விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்டறிந்து அசத்தி வந்தாலும், நமது சூரிய மண்டலத்தின் ஆதார மையமான சூரியன் குறித்த பல தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றன.
சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’, சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind) தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை!
ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் ‘நாற்பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்லது மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைகோளை நாசா அனுப்பி வைத்தது.
சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கிலோமீற்றர் பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்பட்டது.
ஏனென்றால், இந்த செயற்கைக்கோள், அதீத தட்பவெப்ப நிலைகளை தாங்கும் சுமார் 11.4 சென்றிமீற்றர் (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில், சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.