இலங்கைசெய்திகள்

சகோதரமனப்பான்மையுடன் தான் நான் நிருவாகம் செய்தேன் – ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த!!

Officer in Charge of Police Jayantha

சிங்களத் தாய்மாரின் பிள்ளைகள்தான் முஸ்லிம்கள் அந்த சகோதர மனப்பான்மையுடன்தான் நான் நிருவாகம் செய்தேன் – ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த.

எங்களது மஹாவம்சம் சரித்திர நூலிலே குறிப்பட்டுள்ள சிங்களத் தாய்மாரின் பிள்ளைகள்தான் முஸ்லிம்கள் என்ற அந்த சகோதர மனப்பான்மையை மனதில் வைத்துக் கொண்டு அதன்படிதான் எனது நிருவாகக் கடமைகளை நான் ஆற்றினேன். அதனால் முஸ்லிம் பகுதிகளில் கடமை செய்வது எனக்கு இலகுவாக இருந்தது என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விட்டு ஓய்வு பெற்றுச் செல்லும் அப்பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடை வைபவமும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் நகர சபை மண்டபத்தில் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் சனிக்கிழமை 01.01.2022 இரவு இடம்பெற்றது.

நிகழ்வில் சமூகப் பிரதிநிதி சார்பில் உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரச கரும மொழிகள் பெயர்ப்பாளருமான எம்.ஐ. பாறூக், ஓய்வு பெற்றுச் செல்லும் ஓ.ஐ.சி ஜயந்த, பொலிஸ் துறைசார்ந்த நிருவாகக் கடமைகளில் மாத்திரமன்றி சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சினைகள், தேவைகளில் அக்கறை கொண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதிலும் கரிசனை காட்டினார். பிரச்சினைகளை நின்று நிதானித்து உற்றுக் கவனித்து உரிய தீர்வைப் பெற்றுத் தந்துள்ளார்.

இதற்கும் மேலதிகமாக அவர் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அவரிடமிருந்த பன்மொழி ஆற்றல் பொலிஸ் பொதுமக்கள் உறவில் புதிய திருப்பத்தைக் கொண்டு வந்து மக்களை நெருங்க வைத்தது. அதன்மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடிந்தது.

அதுமாத்திரமன்றி அவர் சிறுவர்களோடும் நேசம் காட்டினார். அவர்களுக்கு உதவி செய்தார். சிலபோது சிறார்களுக்கு கல்வியும் புகட்டினார். இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

ஏறாவூரின் வரலாற்றிலே ஊர் கூடி அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்தி வழியனுப்பி வைப்பது இதுதான் முதல் தடைவ.” என்றார்.

இந்நிகழ்வில் உரையற்றிய ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம், ஸஹ்ரானின் பிரச்சினை ஏற்பட்டதன் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்ட களங்கமும் நெருக்கடியும் இன்று வரை தணியவில்லை. ஆனாலும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்தவை போலுள்ள, இந்த நாட்டின் நல்லுறவை நேசிக்கும் பெருந்தகைகள் உண்மையான குற்றவாளிகளிலிருந்து அப்பாவிகளை வேறுபடுத்தி நீதியை நிலைநாட்டினார்கள். அதனால் முஸ்லிம் சமூகம் தலைநிமிர முடிந்தது. அவர்களது சேவை அழியாப் புகழ்பெற்றது.” என்றார்.

நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹ{ல் ஹக் ,பிரதித் தலைவர் எம்.எல். றெபுபாசம், நகர சபை முன்னாள் தவிசாளர் ஐ. அப்துல்வாஸித் உட்பட நகர சபை உறுப்பினர்களும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்தவின் சேவைகளைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button