மாலைச்சூரியன் தன் பணி முடித்து, நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.
மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது.
மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். அது பிற்பகல் 5 எனக்காட்டி நிற்க, கதைச்சத்தம் கேட்டு அலுவலக வாயிலைப் பார்த்தான். அகரனும் அவனுடைய சித்தியும் வந்து கொண்டிருந்தனர்.
அவன் தான் வரச்சொல்லி இருந்தான். அகரனைப் பொறுப்பெடுப்பதற்காக சில தகவல்கள் தேவைப்பட்டன.
இவனைக் கண்டதும் அகரனின் முகத்தில் தோன்றிய உணர்வை இவனால் புரிந்து கொள்ளமுடிந்தது. அன்பு, மகிழ்ச்சி, நிம்மதி, நிறைவு என எல்லாமே நிறைந்திருந்தது அவனது முகத்தில்.
“வா…..வா…..வாடா அகரன்….” “வாங்கோ அக்கா” என்றபடி, கதிரைகளை நோக்கி கைகளைக் காட்டினான்.
“வணக்கம் தம்பி…..” என்றபடி உள்ளே வந்த அகரனின் சித்தியிடம்,
“வணக்கம் அக்கா….. ” எப்படி இருக்கிறீர்கள் ? என்ன சொல்கிறான் அகரன்?” எனக்கேட்க,
“பாவம் தம்பி அவன், வாய்விட்டு கதைக்கவே பயப்படுகிற வாயில்லாத பூச்சி அது” எனறார்.
“டேய்….அகரன்…..மௌனம் நல்ல விசயம் தான், ஆனால் கதைக்க வேண்டிய இடத்திலை கதைக்கவேணுமடா…இப்படி இருந்தால் காலத்தோடு நீ ஓட முடியாதேடா….” என்ற தேவமித்திரனுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக்கினான் அகரன்.
யோசனையோடு அகரனைப் பார்த்த தேவமித்திரன்,
“சரி….நீ படிப்பாய் தானே….?” என்றான்.
“ம்ம்…” தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் அகரன்.
“சரி ..நீ படித்து முடித்து யாராக வருவாய்? ” என்றதும்
அந்தப்பிஞ்சு விரல்கள் உயர்ந்து, தேவமித்திரனைச் சுட்டிக் காட்டியது.
புரியாமல் பார்த்த தேவமித்திரன், ‘என்னடா ?’ என்றான் குழப்பமாக….
“சட்டத்தரணி…..”
உறுதியோடு வந்த பதிலில் இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
அகரன் சொன்ன தோரணையில், அவனுக்குள் இருந்த உறுதி தெளிவாகப் புலப்பட்டது.
ஆச்சரியமாக அகரனைப் பார்த்த தேவமித்திரன்,
“ஏன் சட்டத்தரணியாக வரப்போகிறாய்? ” என்று கேட்க,
“தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அதுக்கு நான் சட்டத்தரணியாக வந்தால்தான், தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் ” என்ற அகரனை, இறுக்கமாக அணைத்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது தேவமித்திரனுக்கு.
மனதில் அன்று தோன்றிய எண்ணம் இன்று வலுவாகி உறுதியானது.
“அக்கா….அகரனின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எல்லாம் கொண்டு வந்தீர்களா?” என்றுகேட்டான்.
“ஓம்….தம்பி….கொண்டு வந்தனான்…கொஞ்சம் விரைவா , இவனுக்கு ஒரு வழி செய்து தந்தியள் எண்டால் பெரிய உதவியாக இருக்கும். நானும் எங்கையேனும் வேலைக்குப் போவன், தெரியும் தானே நாட்டு நிலை, பொருட்கள் விக்கிற விலைக்கு வீட்டிலை, கோழிமுட்டை, பால், இதுகளாலை வாற வருமானம் காணாது, இவனை ஒரு மாதிரி நானே வளக்கலாம் எண்டாலும், அப்பன்காரன் விடமாட்டான் தம்பி….இந்தப் பெடிக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேணும் தம்பி, எங்களை மாதிரி இதின்ரை வாழ்க்கையும் சீரழியக்கூடாது…பெடி இஞ்ச இருந்தால் , தகப்பன் குடிச்சுப்போட்டு ரணகளம் ஆடுவான். தான் கெட்டது காணாமல் இந்த பிஞ்சின்ரை வாழ்க்கையையும் கருக்கிப்போடுவான், கடைசியில் இவனும் சிறைக்குப் போற நிலைமைதான் வரும். அதுதான் தம்பி…..” மூச்சு விடாமல் சொல்லி முடித்த அகரனின் சித்தியை கவலையோடு பார்த்தான் தேவமித்திரன்.
அகரனைப் பெற்றெடுக்காத தாயின் குரலாக அந்த வரிகள் அவனுக்கு கேட்டது.
“பெரிய பெரிய கனவுகள் அகரனுக்குள் இருக்கிறது, அவை பட்டுப்போகாமல் விருட்சமாக வேண்டும், அதற்காக அவன் முழுமூச்சாக உழைக்க வேண்டும் ” என்ற உறுதியோடு, தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு,
“அகரன்… நீ என்னோடு வந்து தங்குகிறாயா? வீட்டில் நானும் அப்பாவும் தான்….உனக்கு என்ன வேண்டுமோ, அதை எல்லாம் நான் செய்கிறேன் ”
எனக்கேட்ட தேவமித்திரனுக்கு சந்தோசமாகச் சம்மதம் சொன்னான் அகரன்.
எழுந்திருக்கும் போது, ‘இந்தாங்கோ அக்கா’ என்று இரண்டு ஐந்தாயிரம் ரூபா நோட்டுகளை அகரனின் சித்தியிடம் கொடுத்தான்.
“ஐயோ….வேண்டாம் தம்பி….காசெல்லாம் வேண்டாம் ” வாங்க மறுத்து விட்டு அவர் முன்னே சென்றுவிட,
“அகரன், இதை வாங்கு…என்னைப் பொறுத்தவரை இந்த நிமிடத்தில் இருந்து நீ என்னுடைய பொறுப்பு…ஒரு வகையில் என் மகனாகத் தான் உன்னைத் தத்தெடுக்கிறேன்….உன்னுடைய செலவுகளுக்கு இதனை வைத்துக்கொள்” என்படி, மருண்டு விழித்த அகரனின் கைகளில் பணத்தைக் கொடுத்தபடி அவர்களுக்கு விடை கொடுத்தான்.
புன்னகையோடு சென்ற அகரனின் தோற்றம் அவனுடைய மனதில் அழியாமல் பதிந்து கொண்டது.
தீ …..தொடரும்.