மாலைச்சூரியன் நிலாப்பெண்ணுக்கு மடல் வரைந்தபடி தனது உலாவை முடித்துக்கொண்டிருந்தான்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் மருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
அலுவலக அறைக்குள் நுழைந்து வீட்டிற்குப் போக எத்தனித்த போது தான், இன்று மாலை தான் காரை தருவதாகவும் சற்று நேரம் காத்திருந்து அதனை வாங்கிச் செல்லுமாறும் தேவமித்திரன் சொன்னதாக மேகவர்ணன் சொல்லிச் சென்றது நினைவு வர கதிரையில் அமர்ந்து கொண்டேன்.
நித்திரை கண்களைச் சுழற்ற, உடம்பை முறித்து கதிரையில நன்றாக சாய்ந்து அமர்ந்து கைப்பையில் இருந்து அலைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பிக்கவும் தான், சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது.
என்னுடைய முகநூலில் உள்நுழைந்து, தேவமித்திரன் என்ற பெயரைத் தேடியபோது, அவனுடைய புகைப்படத்துடன் அவனது முகநூல் கணக்கு தென்பட்டது.
அரசியல் சார்ந்த கட்டுரைகள், நாட்டு நடப்புகள், முக்கிய செய்திகள், தகவல் துணுக்குகள், இயற்கையோடு இணைந்த வாழ்வியல், ஆங்காங்கே திருக்குறள், அறிவியல் மேதைகளின் எண்ணத்துளிகள், அடிக்கடி கார்ல்மாக்ஸ் பற்றிய சிறு குறிப்புகள் என ஒரு சிறந்த சமூக அக்கறையாளன் எனக்காட்டியது அவனுடைய முகநூல்.
அவசரமாக என் கைகள் நட்பு அழைப்பு கொடுத்து விட்டது.
இதுவரை முக்கியமான சில வைத்தியதுறை சார்ந்தவர்கள் தவிர வேறு யாருக்கும் நான் நட்பு அழைப்பு கொடுத்ததே இல்லை.
‘தேவமித்திரன் என்ன நினைப்பானோ’ என்ற எண்ணம் தோன்றியபோதும் ‘அவனுக்குத் தான் என்னை யாரென்று தெரியவில்லையே’ என நினைத்து என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.
அரசியலில் எனக்கு அதிகம் ஆர்வம் இல்லை எனும் போதும் அவனுடைய கட்டுரைகள் வாசிக்கத் தூண்டும் விதமாகவே இருந்தது.
இளையோருக்காக சில நலத்திட்டங்களையும் தேவமித்திரன் செயற்படுத்திக் கொண்டிருந்தான்.
ஏட்டுக்கல்வியை.விட அனுபவக்கல்வி அவனை அதிகம் பக்குவப்படுத்தியிருப்பது அந்த எழுத்துக்கள் வாயிலாகப் புரிந்தது.
சமூகச் சாக்கடைகளுக்குள் புரையோடிக்கிடந்த சில மூடக்கொள்கைகளுக்கு தன் வரிகளால் சாட்டையடி கொடுத்திருந்தான்.
நீதிமன்ற கட்டடங்களுக்குள் தான் கண்ட வலி தந்த சம்பவங்களை ஆண் பெண் என்ற பாலின பேதமற்று அலசி ஆராய்ந்து தீர்த்திருந்தான்.
வித்தியா, வைஷ்ணவி, ஆசிபா இப்படி ஒவ்வொரு பாலியல் துஷ்பிரயோகம் நடந்த போதும் அவன் கொதித்துக் கொப்பளித்த வரிகள் அவனுடைய மனக்குமுறலை படம் போட்டுக் காட்டியது.
ஆக்கிரமிப்புகளும் அடாவடிகளும் நிலப்பறிப்பும், சிலைவைக்கும் திணிப்புகளும் நடந்த போதெல்லாம் எரிமலையாய் கனன்று தன் எண்ணங்களை எழுத்துகளாக வடித்திருந்தான்.
அறப்போராட்டங்களுக்கு அவனுடைய முழு ஆதரவைத் தெரிவித்திருந்தான்.
குமுகாயப்பற்றுக் கொண்ட ஒரு குடிமகனாக அவன் இருப்பதாக எண்ணிக்கொண்டேன்.
‘அநியாயங்களைக் கண்டு ஆவேசமடையும் எங்கள் சே’ எனப் புகழாரம் சூட்டி பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்திருந்தனர் நண்பர்கள்.
அவனுடைய முகநூல் பார்ப்பதில் நான் மூழ்கியிருக்க,
‘டொக்ரர்…..’ என்ற மேகவர்ணனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தேன்.
மேகவர்ணனுடன் ஓரளவு வயதான தந்தை ஒருவரும் நிற்பதைக்கண்டு, விளங்காமல் நான் நிற்க,
“இவர், தேவா….அதுதான்..தேவமித்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு. சாரதியாக வேலை செய்கிறவர். ஏதோ அலுவலாக கிளிநொச்சி வரவும், அவரிட்டையே காரை குடுத்துவிட்டிருக்கிறான் தேவா…”
மேகவர்ணன் சொல்லிக் கொண்டிருக்க, எனக்குள் கனன்று எழுந்த கோபத்திற்கு எனக்கு காரணம் தெரியவில்லை.
சட்டென்று நிதானித்து மேகவர்ணனின் அருகில் நின்ற அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
கார்ச்சாவியை வாங்கிக்கொண்டே,
“ஏதாவது குடித்து விட்டுப் போகலாம், வாங்கோ அப்பா…..”என்றேன்.
“இல்லை…வேண்டாம் மகள் …” அப்பா மறுக்க,
“நான் கூட்டிக் கொண்டு போறன், நீங்கள் வெளிக்கிடுங்கோ டொக்ரர் ”
என்ற மேகவர்ணனை நன்றியோடு பார்த்து விட்டு, அவசரமாக கைப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்ட நான், காருக்குள் ஏறியதும் முகநூலில் தேவமித்திரனுக்கு கொடுத்த நட்பு அழைப்பை அழித்து விட்டு பெருமூச்சோடு காரை எடுத்தேன்.
தீ …..தொடரும்.