விவாதங்களை கைவிட்டு தீர்வுக்கான ஆக்கபூர்வமான பணிகளை இருவரும் முன்னெடுக்க வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட் மற்றும் சாணக்கியனிடம் NFGG வேண்டுகோள்.
“அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக நடக்கும் விவாதங்களின் பலனாகக் கூட எந்தத் தீர்வுகளும் கிடைப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் ஊடகங்களுக்கு முன்னால் நடாத்தப்படும் விவாதங்கள் மேலும் பிரிவினைகளை விரிவாக்குவதற்கு உதவுமே தவிர மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட் மற்றும் சாணக்கியன் ஆகியோர் தமது விவாதங்களை தவிர்த்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுப்பதே சிறந்ததாகும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) இருவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….. “மட்டக்களப்பை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட் மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கிடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி தொலைக்காட்சியில் நேரலையாக பகிரங்க விவாதமொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது. அதற்கு இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். ‘மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கிறதா? இல்லையா?’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதம் பல்வேறு வகையான எதிர்வினைகளை ஏற்கனவே தோற்றுவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 10ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள், ” முஸ்லிம்களின் காணப்பிரச்சினையை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடகமாடுகின்றனர்” என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நஸீர் அஹமட் அவர்கள் சாணக்கியன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே இப்பகிரங்க விவாதம் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கையில் மிக நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கான காரணிகளில் காணிப் பங்கீடு தொடர்பான விடயம் முதன்மையானது. மட்டக்களப்பும் இதற்கு விதி விலக்கல்ல. நம் நாட்டில் சகல சமூகத்தினரும் காணிப் பிரச்சினைகளை எதிர் கொண்டேயுள்ளனர். இப்பிரச்சினைகளின் வடிவமும், பின்னணியும், பாரதூரமும் இடத்துக்கிடம் வேறுபடலாம்.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 25 வீதம் என்கின்ற சிறுபான்மையாக உள்ளனர்.
இருந்தாலும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் மொத்த நிலப்பரப்பு 2 வீதத்தை விடவும் குறைவாகவே உள்ளது என சில புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினையின் தீவிரத் தன்மையினை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதனை யாரும் மறுக்க முடியாது.
இப்பிரச்சனைக்கு நீண்ட கால அரசியல் மற்றும் அரச நிர்வாக விடயங்கள் காரணமாக இருக்கின்றன. இவை அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவுமே தீர்க்கப்பட வேண்டும். காணிப்பிரச்சினை என்கின்ற விடயம் தமிழ் முஸ்லிம் அரசியலில் மிக நீண்ட காலமாகவே பிரதான பேசுபருளாக இருந்து வருகின்றது. ஒவ்வொரு தேர்தல்களிலும் சகல தமிழ்-முஸ்லிம் கட்சிகளும் இப்பிரச்சினையை முன்வைத்தே வாக்குக் கேட்கின்றார்கள். தமக்கு அதிகாரம் கிடைத்தால் தீர்வினைப் பெற்றுத் தருவோம் எனவும் கூறுகின்றார்கள்.
அவ்வாறு பெரும் பெரும் அரசியல் அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் காணிப் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் பெற்றுக் கொடுத்ததாக வரலாறு இல்லை. இவ்விடயம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டுமென்றால் தமிழ்-முஸ்லிம் சமூக அரசியல் பிரதிநிதிகளுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும் இணக்கப்பாடும் அவசியமாகும்.
அவ்வாறான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தக்கூடிய சுமூக அரசியல் சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் கடந்த காலங்களிலும் நிலவின. தற்போதும் நிலவுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி காணிப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் துரதிஷ்டம் ஆகும்.
உதாரணமாக இவ்விவாதத்தை கோரியுள்ள நஸீர் அஹமட் அவர்களின் கட்சியான SLMC மற்றும் சாணக்கியன் அவர்களின் கட்சியான TNA என்பவற்றுக் கிடையில் கடந்த 2015 பெப்ரவரியில் நல்லதொரு அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டது. அதனடிப்படையில், TNAஇன் ஆதரவோடு SLMC கிழக்கு மாகாண சபையில் ஆட்சியினை அமைத்தது. முதலமைச்சர் பதவி நசீர் அஹமட் அவர்களுக்கு கிடைத்தது. அதே போல 2 அமைச்சுப் பதவிகளும் கிழக்கு மாகாண சபையின் உதவித் தவிசாளர் பதவியும் TNAகும் வழங்கப்பட்டன.
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற இரண்டு கட்சிகளுக்குமிடையில் ஏற்பட்ட மிக அருமையான அரசியல் இணக்கப்பாட்டு சூழ்நிலை அதுவாகும்.
தமக்கிடையில் பதவிகளை பங்கு வைப்பதற்கும் அப்பால் சென்று தமிழ்-முஸ்லிம் மக்களுக்கான பிரச்சினைகளை எவ்வாறு பரஸ்பர இணக்கப்பாட்டுடன் தீர்த்து வைக்க முடியும் என்பது தொடர்பிலேயே அச்சந்தர்ப்பத்தில் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அவ்வேளை, அவர்கள் தமக்கிடையில் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட இதுபோன்ற மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி எதுவும் பேசப் பட்டிருக்கவில்லை.
அதே போல காணிப்பிரச்சினையினை அதிகார பூர்வமாகத் தீர்க்கக் கூடிய முதலமைச்சர் பதவியில் நஸீர் ஹாபிஸும் இருந்தார். TNAஉடன் இணைந்தே கிழக்கு மாகாணசபையினை கொண்டு நடாத்தினார். காணிப்பிரச்சினை தொடர்பில் பேசி சுமூகமாக தீர்வுகளைக் காண அருமையான அரசியல் சூழ்நிலையும் அதற்கேற்ற அதிகாரமும் அவர் கையில் இருந்தது. அதனையும் அவர் செய்யவில்லை.
தற்போதும் கூட, பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும், அரச உயர் மட்டத்திற்கு நெருக்கமான ஒரு பிரதிநிதியாகவே இருக்கிறார். அரசாங்கத்தை சேர்ந்த, மட்டக்களப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மேலும் இரு தமிழ் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இணைந்து காணிப் பிரச்சினை தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்றால் அது தீர்வுக்கான நல்லதொரு ஆரம்பமாக அமையும். இவர்கள் அனைவரும் இணைந்தே 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். அது இந்த அரசாங்கத்தை சர்வ வல்லமை பொருந்திய ஒன்றாக மாற்றியிருக்கிறது. இவ்வாறு பலம் பொருந்திய மத்திய அரசாங்கத்தின் உதவியோடு மட்டக்களப்பின் காணிப் பிரச்சினைகளை இவர்கள் எல்லோருமாக இணைந்து தீர்க்க முடியும்.
அதேபோன்று TNA கட்சியானது SLMC கட்சியுடன் தற்போதும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக எடுத்து, கிழக்கின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் எல்லோரும் தமக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான மற்றுமொரு அணுகுமுறையாக அது அமையும்.
தீர்வுகளை நோக்கிய இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைக் கைவிட்டு விவாதங்களில் இறங்குவது எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அதி உயர் சபையான பாராளுமன்றத்தில் நடக்கின்ற விவாதங்கள் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத் தராத நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் இதனைப் பேசுவது எவ்வித விளைவையும் தரப்போவதில்லை. முரண்பாடுகளையும், பிரிவுகளையும் மேலும் கூர்மைப்படுத்தக்கூடிய அபாயத்தினையே இது கொண்டிருக்கிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்களை மேலும் பிரிவினைகளுக்குள் தள்ளி அரசியல் இலாபம் தேடும் நிகழ்ச்சி நிரல்களை நிறையவே அவதானிக்க முடிகிறது. இது போன்ற விவாதங்களும் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகும் என்பதனையும் இருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே, எந்த நல்ல விளைவுகளையும் தர முடியாத இந்த விவாதத்தை தமிழ் -முஸ்லிம் மக்களின் நலன் கருதி கைவிடுமாறு இருவரிடமும் நாம் வினயமுடன் கோருகின்றோம். பதிலாக, ஆக்கபூர்வமான அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் அதனடிப்படையில் சுமூகமான தீர்வுகளை காணக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டிற்காக முயற்சிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். எமது இந்த வேண்டுகோளினையும் ஆலோசனைகளையும் இருவரிடமும் நாம் நேரடியாகவும் தெரிவித்திருக்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் – வ.சக்திவேல்