இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் நடுநிலை மருத்துவ படிப்புகளான எம் பி பிஎஸ், பிடி எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 7ஆம் திகதி நடந்தது.வன்முறை காரணமாக அன்றைய திகதியில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படவில்லை.
அந்த மாநிலத்தில் இந்த மாதம் 6 ஆம் திகதி 11 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று (13) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்களின் பெயர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான வெட்டுப் புள்ளி மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.
மதிப்பெண் விவரங்கள் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 78693 பேர் சித்தி அடைத்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.