இலங்கைசெய்திகள்

“கோப் பிரஸ்” நவீன பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு!!

Modern supermarket

பொதுமக்களுக்கு பசுமையாக பொருட்கள் கிடைக்கப்பெறும் வகையில் கோப் பிரஸ் எனும் திட்டத்தின் கீழ் நவீன பல்பொருள் அங்காடி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவதாக ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு, நீர்ப்பாசன, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நிலையத்தின் புன்னைக்குடா வளாகத்தில் இந்த நவீன பல்பொருள் அங்காடி வியாழக்கிழமை 06.01.2022 இன்று திறந்து வைக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண அமைச்சின் செயலாளர் கலாமதி, ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமும் அதன் பணிப்பாளர்களும் பணியாளர்களும் சிறந்த செயற்பாட்டைச் செய்து காட்டி நடைமுறையில் அதனை நிரூபித்துள்ளதால் அச்சங்கம் கிழக்கு மாகாணத்திலேயே சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.

இதுபோன்று கிழக்கு மாகாணத்தில் 16 நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

கூட்டுறவுப் பணி ஆரம்ப காலகட்டத்தில் அது சிறந்து விளங்கியபோதிலும் பின்னர் அதன் சேவைகள் நலிவுற்றிருந்தது.

நீங்கள் பதவியை விட்டு விலகும்போது என்ன செய்தீர்கள் என்பதை நினைவுபடுத்தக் கூடிய வகையில் உங்களது சேவைகள் அமைய வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கூட்டுறவுப் பகுதியினர் மிகவும் காத்திரமான பணியை ஆற்றியிருந்தார்கள்.

தற்போது எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பணியாற்றியுள்ளது என்பது மகிகழ்ச்சிக்குரிய விடயம்.

மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் உங்களது பணிகள் இடம்பெறவேண்டும். ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அர்ப்பணிப்போடு கடின பணியாற்றுபவர் என்று நான் அறிந்துள்ளேன்.

ஆகவே அவரோடு சேர்ந்து இந்தப் பணிப்பாளர் சபையும் பணியாளர்களும் இயங்கினால் இன்னமும் சாதனை படைக்கலாம்.” என்றார்.

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரால் கூட்டுறவு வைத்தியசாலை, கூட்டுறவு ஆடைத் தொழிலகம், எரிபொருள் நிரப்பு நிலையம், கூட்டுறவுச் சேவை நிலையம், கூட்டுறவு அரிசி ஆலை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவுக் கிராமிய வங்கி, கூட்டுறவு வாகன சுத்திகரிப்பு நிலையம் என்பன நடாத்தப்பட்டு வருவதுடன் தற்போது கோப் பிரஸ் நவீன பல்பொருள் அங்காடியையும் அச்சங்கத்தினர் திறந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் அதன் ஊழியர்களுக்கு வருடாந்த போனஸ் மிகை ஊதியக் கொடுப்பனவும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் மாதாந்த விஷேட கொடுப்பனவும் வழங்குகின்ற ஒரேயொரு கூட்டுறவுச் சங்கமாகவும் ஏறாவூர் பலநோக்குக் கூடட்டுறவுச் சங்கம் இயங்கி வருவதாக அதன் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

செய்தியாளர் – சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button