இலங்கைசெய்திகள்

கடலில் குளிக்கச் சென்ற மாணவர்களில் இருவர் மாயம்!!

missing

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சின்னவெம்பு எனும் கடல் பகுதியில் குளிக்கச் சென்ற மாணவர்களில் இருவர் கடலில் மூழ்கிய நிலையில்  மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை 14.01.2022 பிற்பகலளவில் நடந்துள்ள இச்சம்பவத்தில் கிரான் பிரதான வீதி எனும் முகவரியைச் சேர்ந்த ஜீவானந்தம் சுஜன் (வயது 15) பாடசாலை வீதி கிரான் எனும் முகவரியைச் சேர்ந்த சத்தியானந்தன் அக்ஷயன்  (வயது 15) ஆகிய இரு மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

நண்பர்களாகச் சேர்ந்து கடலுக்கு குளிக்கச் சென்ற நிலையில் கடலலையில் அகப்பட்டுள்ளனர். அள்ளுண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு சிறுவன்  கைகளை உயர்த்தி அபயக் குரல் எழுப்பியுள்ளார்.

அதனை அவதானித்த அவ்விடத்தில் நின்ற மீனவ இளைஞர் ஒருவர் உடனடியாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியை எடுத்துக் கொண்டு சிறுவன் மூழ்கிய இடத்திற்கு விரைந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

அப்பொழுது மேலும் இருவர் மூழ்கிய விவரத்தை அந்தச் சிறுவன் மீனவ இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மீனவ சுழியோடிகளும் பொதுமக்களுமாகச் சேர்ந்து கடலலையில் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட கிரான் யூனியன் வீதியைச் சேர்ந்த  தனுகன் துஷான் (வயது 16) எனும் சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை வரை காணாமல் போன சிறுவர்கள் இருவரும் கண்டு பிடிக்கப்படவில்லை என பிரிவுக் கிராம அலுவலர் ஸ்ரீஜெயநந்தினி சிவகுமாரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button