இலங்கைசெய்திகள்

இன்று சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு!!

Minority parties

இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு (12) கொழும்பில் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10.30 அளவில் இந்த சந்திப்பை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், சம காலத்தில், சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அதிகளவான கட்சிகள் பங்கேற்கும் சந்திப்பாக இந்தக் கூட்டம் அமைகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா ஆகியோர் இதில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட சந்திப்பு கடந்த மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.

இந்நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களினதும் பங்கேற்புடன் இந்த சந்திப்பை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, இன்று கொழும்பில் இரண்டாம் கட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் இறுதியில், குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணம், தேசிய அரங்கிலும், சர்வதேச அரங்கிலும், குறிப்பாக இந்திய அரசாங்கத்திற்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த சந்திப்பில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அந்தக் கட்சியும் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button