மண்வாசனை

தூரக்கனவுகளும் ….துயர நினைவுகளும்…. 6- சிறையில் பூத்த மலர் ஒன்றின் கதை- பிரபா அன்பு!!

memories

எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்த தோழி கலையரசி ஈழநிலாவின் மகள் பெரியபிள்ளை ஆகிட்டாள் உனக்கு தெரியுமா என்று கேட்டாள்.

எனக்கு இச்சம்பவத்தை கேட்க நம்பமுடியாமலே இருந்தது,ஈழநிலா ஒரு முன்னாள் போராளி.

போராளியாக இருந்து திருமணமாகி இருந்தவள்.இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடையும்போது வயிற்றில் கருவை சுமந்தவாறுதான் சரணடைந்திருந்தாள்.

ஈழநிலா சரணடைந்து எம்மோடு பம்பைமடு புனர்வாழ்வு முகாம் வந்துவிட்டாள்.கணவரும் சரணடைந்து புனர்வாழ்வு முகாமுக்குச் சென்றுவிட்டார்.

இறுதி யுத்தகாலம் என்பது மிகவும் பரபரப்பான பதற்றமான ஒரு சூழலாகவே அமைந்திருந்தது,காலையில் பார்த்தவர் மதியம் இறந்திருப்பார்.உரையாடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் இருந்து வரும் ரவைகள் உடலை துளைத்தும் செல் துண்டுகளின் காயங்களாலும் கண்ணுக்கு முன்னாலே இறந்துகொண்டிருந்தார்கள் பலரும்.

நாம் தடுப்பு முகாம் வந்தபோது யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள்,யார் உயிரோடு இல்லை என்பதை அறியமுடியாது இருந்தோம்.

இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டவர்கள் உயிரோடு வந்து நின்றார்கள்.உயிரோடு இருக்கிறார்கள் என்று நாம் நினைத்திருந்தவர்கள் இறந்திருந்தார்கள்.அனைத்துமே எதிர்பாராத முடிவாகவே இருந்தது.

அவ்வாறுதான் நாமும் சரணடைந்திருந்தோம்.நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களில் நாம் இருந்தோம்,

நான் Bபகுதி கட்டடத்தில் இருந்தேன்.அடுத்த பகுதி C பகுதி. தறப்பாள் கொட்டிலுக்குள் ஈழநிலா இருந்தபோதும் ஒரு மாதத்தின் பின்புதான் மறு பக்க தறப்பாள் கொட்டிலுக்குள் ஈழநிலா இருப்பதைக் கண்டு பிடித்தேன்.

மாலை வேளைகளில் மறுபக்க கட்டடங்களில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக முள்ளுக் கம்பிகளோடு சென்று நிற்போம்.இராணுவத்தினர் எம்மை கதைக்கவிடாது அதிகமாக துரத்துவார்கள், கதைப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஒரு நாள் நான் முள்ளுக் கம்பியோடு நின்றிருந்தபோது எனது பெயரை கூறி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு பார்த்தபோதுதான் அது ஈழநிலா என்பதைக் கண்டு பிடித்தேன்.

எமக்கும் அவர்களுக்கும் இடையில் பல மீற்றர்கள் இடைவெளி.பலர் நின்று சத்தமாக கதைப்பதால் கதைப்பதுகூட விளங்காது.

அவளது கணவரும் சரணடைந்ததாகவும் இராணுவத்தினர் தடுப்புக்குக் கொண்டு சென்றதாகவும் இப்ப எங்க இருக்கிறார் என்று தெரியாது என்றும் கூறியதுடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினாள்,

சரணடைந்த புதிதில் எமக்கு சாப்பாடு போதுமானதாக வருவதில்லை.அடிப்படை தேவைகளினை பூர்த்தி செய்ய முடியாது திண்டாடினோம்,

சில போராளிகள் தமது சிறு குழந்தைகளோடு சரணடைந்திருந்தனர்,அதேபோல் சில போராளிகள் கர்ப்பவதிகளாக சரணடைந்திருந்தனர்,

வயிற்றில் பிள்ளையோடு சரணடைந்திருந்த ஈழநிலாவிற்கு நேரத்திற்கு சரியான உணவில்லாமலும் சத்தான உணவும் கிடைக்காமல் நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள்.

பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த ஈழநிலாவிற்கு 2009 ஆம் ஆண்டு 12 ம் மாதம் 20 திகதி அன்று பம்பைமடு தடுப்பு முகாமில் பெண் குழந்தை பிறந்தது.அதற்கு பவித்திரா என்று பெயரும் வைத்திருந்தாள்.

தடுப்பு முகாமில் உணவுப் பிரச்சனைகள் உட்பட அடிப்படை பிரச்சனைகள் பல தீர்க்கமுடியாமல் இருந்தபடியால் பவித்திரா பிறந்து 9 நாட்களால் ஈழநிலா விடுதலை செய்யப்பட்டாள்.

தனது பிள்ளையோடு வந்து பெற்றோரோடு இருந்தாள்.ஈழநிலாவின் கணவரும் சிலவருட புனர்வாழ்வு முடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

ஈழநிலாவிற்கு உதவியாக இருந்தது அவளது பெற்றோரே.அவர்களும் அடுத்தடுத்து இறந்துபோக பொருளாதார பிரச்சனைகளால் செய்வதறியாது தவித்து நின்றாள்.

அவள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முதல் பெற்றோரின் இழப்பு அவளிற்கு மனக்கஸ்ரத்தை அதிகமாக கொடுத்திருந்தது.

காலங்களும் மெல்ல நகர்ந்தது.இந்நிலையில்தான் பம்பைமடு தடுப்பு முகாமில் பிறந்த பவித்திரா 12 வயதை நிறைவுசெய்து 13 வயதில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் பூப்பெய்தியிருந்தாள்.

பவி பெரியவளாகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் முன்னாள் போராளியான கணவனும் விபத்தொன்றில் சிக்கி தோள் பகுதியில் எலும்பு முறிந்த நிலையில் வேலையும் இன்றி இருந்தார்,

ஏற்கனவே அவரிற்கு  உடல் முழுவதும் காயங்களும் அத்தோடு செல் துண்டும் உடலில் இருப்பதால் அதனை அகற்றினால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இருப்பவர்,

இப்போது பவித்திராவிற்கு சத்தான உணவுகள் கொடுக்க வேண்டிய நேரம்,தந்தையாரும் விபத்தில் சிக்கி வேலைகள் இல்லாது இருப்பதால் மிகவும் கஸ்ரமான நிலையில் ஈழநிலா இருக்கிறாள்,

கலையரசி தொடர்பினை ஏற்படுத்தி எனக்கு கூறியபோது ஈழநிலாவிற்கு எடுத்து நிலைமையைக் கேட்டேன்.

தன்னால் என்ன செய்வதென்று தெரியாதுள்ளதெனக் கூறி கவலைப்பட்டாள் ஈழநிலா.

பவி பெரியவளாகிவிட்ட செய்தி மகிழ்வான ஒரு விடயமாக இருந்தாலும் தந்தையாரின் இயலாமையும் குடும்ப வறுமையும் ஈழநிலாவை கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.

நான் பவித்திராவைப் பார்ப்பதற்கு சென்றபோது புனர்வாழ்வு முகாமில் 2009 ல் பார்த்த குட்டி குழந்தை பவித்திரா இப்போது வளர்ந்து பெரியவளாகி என்னளவில் நின்றாள்,காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது,

நானும் என்னால் முடிந்த உதவியை மட்டுமே செய்துவிட்டு வந்தேன்.ஆனால் நான் வழங்கிய உதவி அவர்களிற்கு போதுமானதாக இல்லை.

நாங்கள் இப்போதுதான் சரணடைந்ததுபோல் மனநிலை உள்ளது.பம்பைமடுவில் குட்டி குழந்தையாக நாங்கள் பார்த்த பவி இன்று வளர்ந்து நிற்கிறாள்.

கருவில் இருக்கும்போது குண்டுச்சத்தங்களை கேட்டு வளர்ந்துகொண்டிருந்தாலே தவிர போதிய சத்தான உணவில்லை,
பிறந்தபோதும் சரியான பராமரிப்பு உணவில்லை.இப்போது பெரியவளாகியும் இதே நிலையாகிவிட்டது பவித்திராக்கு.

கருவுற்றபோது ஆரம்பித்த துயரம் வளர்ந்து பெரியவளாகியபோதும் பவிக்கு நீங்கவில்லை.

யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பல குடும்பங்களிற்கு இன்றுவரை பெரும் இழப்பாகவும் துயரமாகவுமே அமைந்துள்ளது.

பலர் குடும்ப உறவுகளின் இழப்பில் இருந்து மீளவில்லை.அதேபோல் காயங்களால் ஏற்பட்ட வலிகள் பலருக்கு இன்றுவரை தொடர் வலிகளையே கொடுத்தபடி உள்ளது.

இப்போதெல்லாம் அதிகமாக நான் நினைத்துக்கொண்டிருப்பது பவி சத்தான உணவு சாப்பிடுவாளா.?அவளிற்கு என்னால் மீண்டும் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணமே.

காலங்கள் காயங்களை ஆற்றும் ஆனால் அதனால் ஏற்பட்ட மனத் துயரங்களும் இழப்புக்களும் ஏதோ ஒரு வழியில் மீளவிடாது நம்மை பற்றிப் பிடித்திருக்கும் என்பதுதான் வேதனையாக விடயமாகிறது.

நினைவுகள் தொடரும்……

Related Articles

Leave a Reply

Back to top button