மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் வெள்ளிக்கிழமை (28) காலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகர(ஜனா)த்தினால் பொலிசாரின் கெடுபிடிகளையும் மீறி அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும் முன்னாள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் உள்ளிட்டோர் பங்கு கொண்டிருந்தனர்.
போலிசார் தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணையில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட நூறுக்கு மேற்பட்டடோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் – சக்தி