உங்களுக்காகவோ அல்லது உங்கள் உறவினருக்காகவோ, மருத்துவரிடம் வழக்கம் போல், உடல் நல மறு ஆய்வுக்குச் செல்கிறீர்களா? (Do you have an appointment with your Doctor for you or your relative’s Health Review?) அப்படி செல்லும் முன், மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கத் தேவையான தகவல்களையும், நோயாளியின் உடல் நலம் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்களையும், முன்கூட்டியே, பட்டியலிட்டு (Health Review Checklist) தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
வழக்கமாக மருத்துவர் மறு ஆய்வு (Health Review), சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் இருக்கும். அப்படி சில கால இடைவெளிக்குப் பின் செல்லும் போது, நாம் மருத்துவரிடம் சில முக்கியமான தகவல்களை அளிக்க மறந்துவிடக் கூடும்.
இதைத் தவிர்க்க, மருத்துவரை மறு ஆய்வுக்கு (Health Review) அணுகும் முன், கீழ்க் கண்ட விவரங்களைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்:
மருத்துவ பரிசோதனை முடிவுகள்(Health Check-up Results): அடுத்த ஆய்வுக்கு செல்லும் முன், மருத்துவ பரிசோதனைகள் செய்யும் படி, உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினாரா? அப்படியென்றால், எல்லா பரிசோதனைகளையும் செய்து, சோதனை முடிவுகளை, ஒரு கோப்பில் கோர்த்து, பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
Diagnosis
உடல் நிலை (Health Condition): இடைப்பட்ட காலத்தில், நோயாளியின் உடல் நலத்தில் ஏற்படும் முன்னேற்றம் அல்லது குறைபாட்டை, தேதியுடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் நலத்தில் ஒரே விதமான குறைபாடு மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அவ்வாறு ஏற்படுகிறது, என்ன விதமான உணவு உட்கொண்ட பின், எந்த நேரத்தில் அவ்வாறு நிகழ்கிறது, என்ற விவரங்களை எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரத்தத்தின் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் (Blood Sugar Level and Blood Pressure):சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அல்லது குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உங்கள் வீட்டிலேயே, அவற்றை பரிசோதிக்க உதவும் கருவிகளைக் கொண்டு, சோதனை செய்து, அந்த விவரங்களை, தேதி மற்றும் நேரத்துடன் குறித்துக் கொள்ளுங்கள். அத்தகைய வசதி உங்கள் வீட்டில் இல்லையெனில், அருகில் உள்ள பரிசோதனை மையத்தில் இத்தகைய சோதனைகளை செய்து கொள்ளலாம். இதை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்து கொள்ளலாம். உதாரணமாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை. இல்லையெனில், இந்த கால இடைவெளியையும் மருத்துவரிடமே கேட்டு அதன் படி இந்த பரிசோதனைகளை செய்யலாம்.குறிப்பு: பொதுவாக, மூத்த குடிமக்கள் (Senior Citizens) இருக்கும் இல்லங்களில், சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதிக்க உதவும் கருவிகளை (Blood Sugar Level Monitor / Glucometer and Blood Pressure Monitor) நம் வீட்டிலேயே வாங்கி வைத்து கொள்வது நல்லது. எளிமையாகப் பயன்படுத்தக் கூடிய டிஜிட்டல் / எலெக்ட்ரானிக் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தும் முறை பற்றி, உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, அதன் படி, குறிப்பிட்ட படி சரியான கால இடைவெளியில், நாமே நம் வீட்டில் பரிசோதித்துக் கொள்ளலாம். அவசர கால கட்டங்களிலும் இந்த கருவிகள் நமக்கு உதவியாக இருக்கும்.
பக்க விளைவுகள் (Side Effects): உட்கொள்ளும் மருந்துகளால், ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால், அவற்றை குறித்துக் கொள்ளுங்கள்.
கோப்புகள் (Files): இதற்கு முன்பு மருத்துவர் உங்கள் கோப்பில் குறித்துக் கொடுத்த விவரங்கள், மருந்துகள், பரிசோதனைக்கான அறிவுரைகள் அனைத்தையும் கொண்ட கோப்புகளையும் தயராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உணவு (Diet): நோயாளி தற்போது உண்ணும் உணவுகளின் பட்டியலைக் குறித்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள் (Clarifications): நீங்கள் மருத்துவரிடம் கேட்க நினைக்கும் உடல் நலம் மற்றும் உணவு பற்றிய சந்தேகங்களைப் பட்டியல் இட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி, நோயாளியின் (உங்கள் அல்லது உங்கள் உறவினரின்) உடல் நலம் பற்றிய தகவல்களை முழு விவரத்துடன், முன் கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்வதால், பல நன்மைகள் உண்டு. உங்கள் நேரம் மற்றும் மருத்துவரின் நேரம் மிச்சமாவதோடு, மருத்துவருக்கு, விரைவில் நோயைக் கண்டறிய உதவியாக இருக்கும். இது நோயாளி விரைவில் குணமடைய வழி வகுக்கும்.