இலங்கைசெய்திகள்

ஆசானுக்கு அஞ்சலி!!

maths

எங்கள் ஆசிரியர்கள் பலர் அடிக்கடி மாணவர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி, “வாழைப் பழத்தை உரிச்சு உனக்கு வாயிலே தீத்தி விட வேணுமோ”
ஆனால், வாழைப்பழத்தை உரிச்சு வாயில் தீத்துவது போலவே எளிதாக எந்தக் கடினமான பல விடயத்தையும் படிப்பிக்கும் சில ஆசிரியர்கள் எனக்கு வாய்க்கப் பெற்றனர்.
அத்தகைய ஒரு ஆசிரியத்தகைதான் ஹாட்லிக் கல்லூரியின் கணித ஆசான் ராஜரட்ணம் வாத்தி.
Effortless Teaching – சிரமப்படாத கற்பித்தல்…
இதை எல்லாராலும் செய்துவிட முடியாது. பெரும்பாலான ஆசிரியர்கள் பெரும் சிரமப்பட்டு தீவிர முற்சி எடுத்துத்தான் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். ஹார்ட் வேர்க் பண்ணுகிறார்கள். அதைத்தான் அர்ப்பணிப்பு என்றும் அக்கறை என்றும் உண்மையான கற்பித்தல் என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால், தான் படிப்பிக்கும் பாடத்தை தன் குருதியோடு கலந்தவர்கள் அதைக் கற்பிக்க எந்த சிரமமும் கொள்வதில்லை. மிக இயல்பாக, மிகத் தளர்வாக கற்பிப்பார்கள். வாழைப் பழத்தை உரித்து வாயில் ஊட்டுவது போல் விடயங்கள் எம் மூளைக்குள் புகும்.
அத்தகையவர்களே ஆசான்கள் எனவும் குரு எனவும் கொள்ளத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
அத்தகைய கணித ஆசான், கணித குரு எனக்கு வாய்க்கப் பெற்றது நான் செய்த பாக்கியம்.
ஹாட்லிக் கல்லூரி என்பதற்கு கணிதக் கல்லூரி என்ற பெயரும் உண்டு. ஏனெனில் ஒரு காலத்தில் ஆண்டு தோறும் அதிகமான மாணவர்களை பொறியியல் துறைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது ஹாட்லிக் கல்லூரி. ஹாட்லிக் கல்லூரியின் அந்த கணித வல்லமைக்கு காரணமாக இருந்தவர்கள் ஆசான் ராஜரடணம் போன்றவர்கள்.
கணிதம் என்பது அவருக்கு ஒரு பாடம் அல்ல. அது அவரது இயல்பு. அவரது லைப்ஃ ஸ்டைல்.
நாம் எமது கல்விப் படிமுறையின் முக்கியமான காலகட்டமான ஓ. எல் ஐ நெருங்கும் போது (1983-1984) நாட்டின் நிலைமைகள் மாறி கொண்டிருந்தன. ஹாட்லி கல்லூரி மீதான திட்டமிடப்பட்ட விமானத் தாக்குதல். ஹாட்லியின் அடுத்த வளாகத்தில் இராணுவ முகாம்…
எம் சிந்தனைகளும் செயல்களும் கல்வியிருந்து விலகி போராட்டம், புரட்சி, அரசியல் மீது நாட்டம் கொள்ளத் தொடங்கின. ஆசிரியர்கள் கண்டிக்கவும் வழியின்றி தட்டிக் கொடுக்கவும் மனமின்றி தர்மசங்கடப்பட்டுக் கொண்டிருந்தனர். பலர் அது பற்றி மாணவர்களுடன் கதைக்க்வே பயந்து கொண்டிருந்தனர். ஏனெனில் மாணவர்கள் துவக்குகளை தம் மீதே நீட்டுவிடுவார்களோ என்ற பயம். அந் நேரத்தில், ஒருநாள், ஆசான் ராஜரட்ணம் என்னிடம் கவலை தோய்ந்த முகத்தோடு, கண்டிப்பும் கலந்தபடி, காதோடு காதாகச் சொன்ன வார்த்தை, “Eight D எடுக்கக் கூடியவன் நீ. அநியாயமாகக் கெடுத்திடாதே!”
அதன் பிறகு நான் அவரை முகம் கொடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. நாம் புரட்சி செய்வதில் குறியாக இருந்தோம். அவர் நமக்குத் தடையாகிவிடக்கூடும்.
2017 லண்டன் சென்ற போது ஒரு பிரித்தானிய நண்பர், இலங்கையின் வான்படைக்கு பிரித்தானியா எவ்வாறெல்லாம் பயிற்சி வழங்கியது எந்தெந்த வான் தாக்குதலில் பிரித்தானிய வான்படை வீரர்கள் நேரடியாக ஈடுப்பட்டனர் என்பது பற்றி அவர் செய்த இரகசிய ஆய்வின் அடிப்படையிலான ஆவணப்படம் ஒன்றைக் காட்டினார்.
அதற்காக அந்த பிரித்தானிய நண்பர் வடக்குக் கிழக்கில் பலரைச் சந்த்தித்து பேட்டிகள் எடுத்திருந்தார். அதில் ஒருவர் ஆசான் ராஜரட்ணம் அவர்கள்.
ஹாட்லிக் கல்லூரி நூலகம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் (1984) பற்றி அவர் கதைக்கிறார்.
அப்போதுதான் உணர்ந்தேன், ஹாட்லி மீது குண்டு போடப்பட்ட நேரத்தில் எவ்வளவு கோபத்தை அவர் அடக்கி வைத்திருந்தார் என்பதை. அப்போதுதான் பார்த்தேன் எம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக அவர் மனதில் கனன்று கொண்டிருந்த எரிமலைக் குழம்பை…
கணிதம் ஒரு கோபம், வீரம், ஆவேசம் என்பதையும் உணர்ந்தேன்!
இறுதி வணக்கமும் பல கோடி நன்றிகளும் ஆசானுக்கு!

முகநூலில் இருந்து……

Related Articles

Leave a Reply

Back to top button