“பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.” –
- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இது பற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-
“என்னைப் பொறுத்த வரையில், திருத்தம் அல்ல, இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்துவிட்டது என நினைக்கின்றேன். அவசர நிலைமைகளுக்குச் சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்தச் சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.
ஆனால், இன்று சட்டப் புத்தகங்களில் இருந்து இந்தச் சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகளான பிறகும் அமுலில் இருக்கும் இந்தச் சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கின்றது.
ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இந்தச் சட்டத்தை நீக்க முன்வரவில்லை. இந்தச் சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இந்தச் சட்டம் முழுமையாக நீக்கக் கூடாது எனக் கொடி பிடிக்கின்றார்கள்.
எனினும், அரசுக்கு அரசு இந்தச் சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாகத் தெரிந்தது. எமது ஆட்சியின்போது இந்தச் சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராகக் கலந்துகொண்டுள்ளேன்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை சட்டம் மீளத் திருத்தப்படுகின்றது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கின்றது.
ஐ.நாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளிச் சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகின்றது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.
‘உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐ.நா. என சக்திகளுடன் பேசாதீர்கள்’ என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்” – என்றார்.