எழுத்து – கரவையூர் தயா.
கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்
கலவரம் தானோ காதல்
மனவறைக் குள்ளே மணவறை காணும்
மதுரச மாமோ காதல்
தினசரி போலே தினம்விழி பார்க்கத்
தேடிடுவ தாமோ காதல்
இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்
இணைத்திடும் தேனோ காதல்
*
இருவரு மொன்றி இருதயம் சேர்க்கும்
இலக்கிய மாமோ காதல்
ஒருவரு மறியா உறவது காணும்
ஒருவரம் தானோ காதல்
திருமண மென்னும் திருவிழா காணும்
தெய்வமோ இந்த காதல்
கருவினை சுமக்க கணவரைச் சேரும்
கவிதையைப் போலோ காதல்
*
இல்லற வண்டி இயங்கிட வுள்ள
எரிபொரு ளாமோ காதல்
அல்லலில் சிக்கி அவதிகள் கொள்ளும்
ஆபத் தாமோ காதல்
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
மீன்முள் போலோ காதல்
சொல்லவே முடியா சோதனை யான
சோகமோ இந்தக் காதல்
*
கள்வனைப் போலே கனவினில் வந்து
கதையளப் பதாமோ காதல்
முள்ளுக் கொடியில் முகையை அவிழ்க்கும்
மோகப் பூவோ காதல்
பிள்ளைகள் நாலு பெற்றதன் பின்னே
பிறைபோல் தேய்வதோ காதல்
உள்ளநாள் வரைக்கும் உயிருடன் உயிரை
உயிராய் கொள்வதோ காதல்?
கரவையூர் தயா.