இலங்கைசெய்திகள்

மீண்டும் முடக்கம் ஏற்படுத்தப்படலாம்- யாழ். மாவட்ட அரச அதிபர் எச்சரிக்கை!!

lockdown

அனைத்துச் செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலை தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

யாழில் இதுவரை 19 ஆயிரத்து 62 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 502 பேரின் இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது 35 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளன.

கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 839 பேரும், 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56 ஆயிரம் பேரும், 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57 ஆயிரத்து 265 பேரும் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசியை 88 ஆயிரத்து 800 பேர் பெற்றுள்ளனர். முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர். ஒமிக்ரோன் திரிபு தற்போது பரவிவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலும் அது பரவுவதற்கான நிலைகள் காணப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம். இதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி முதல், பூஸ்டர் தடுப்பூசி வாரத்தைப் பிரகடனப்படுத்தவுள்ளோம்.

பாடசாலை போக்குவரத்து உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button