உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது ஜனநாயக விரோதச் செயலாகும் என விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள் உடனடியாக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
2018 பெப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்ட 340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலும் ஓராண்டுப் பிற்போகும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு உரிய வகையில் செயற்படுவதற்கு நல்லாட்சியின்போது வாய்ப்பு கிடைக்காமை ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சியும் படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவுமே அரசு பதவிக் காலத்தை நீடிக்கும் கைங்கரியத்தை கையாண்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
“மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவி காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும்” என்று எதிரணியில் வலியுறுத்தியுள்ளனர்.