கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது. மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதை மெஸ்ஸி 7 ஆவது முறையாகத் தட்டிச் சென்றுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக இருந்துவரும் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா கிளப் அணியில் இருந்து வெளியேறினார். தற்போது அர்ஜென்டினா அணிக்காக மட்டுமே விளையாடிவரும் இவரது தலைமையில் சமீபத்தில் 15 ஆவது அமெரிக்க கோபா சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த விருது வழங்கும் விழா நேற்று பாரீஸில் நடைபெற்றது. இதில் மெஸ்ஸி 7 ஆவது முறையாக “பாலன் டி ஓர்“ விருதை பெற்றுக்கொண்டார்.
இதற்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலன் டி ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அதற்குப்பின் கடந்த 2010, 2011, 2012 எனத் தொடர்ந்த மூன்று முறை விருதைத் தட்டிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து 2015 இல் 5 ஆவது முறையாக விருது வென்ற மெஸ்ஸி 2020 இல் 7 ஆவது முறையாக இந்த விருதைத் தட்டிச்சென்றுள்ளார்.
அதேபோல மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புட்டெல்லாஸ் தட்டிச்சென்றுள்ளார். இவர் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதால் 3 ஆவது முறையாக பால் டீ ஓர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.