பெண்கள் மற்றும் இளையோருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்றையதினம் (04) புதுக்குடியிருப்பிலுள்ள விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் விழுதின் அலுவலர் சுஜிந்தா பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், அதிகரித்த போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, காணிப்பிரச்சினைகள், தற்கொலைகள், பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணங்கள், விபத்துக்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரச்சினைகள், சட்டமுறையற்ற திருமணப்பதிவுகள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை பங்குபற்றியோர் பகிர்ந்து கொண்டனர்.
இதற்கான சட்ட ஆலோசனைகள் மற்றும் இணைந்து செயற்பட்டு தீர்வுகளினை அடைந்து கொள்ளல் பற்றிய விளக்கங்களினை வளவாளர்களாக கலந்து கொண்ட சட்டத்தரணி பசுபதி ஐங்கரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயந்தி சதீஸ்குமார் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்தர் சுதர்சன் ஆகியோர் வழங்கினர்.
இதன் தொடர் செயற்பாடுகள் எதிர்வரும் மாதங்களில் பங்குதாரர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும். குறித்த பிரச்சினைகளை சட்டத்தின் மூலமாக எவ்வாறு அணுகுவது தொடர்பான ஆலோசனைகளும், குறித்த பிரச்சினைகளுக்கான வழக்குகளை தாக்கல் செய்வது மற்றும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் தீர்வுகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நாற்பதுக்கும் மேற்பட்ட அமரா போர அங்கத்தவர்கள், மாதர் சங்கப் பிரதிநிதிகள், ஏ.சிஜி இளையோர் குழு அங்கத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
செய்தியாளர் – கிஷோரன்