நியாயமற்ற முறையிலேயே அரசு தற்போது ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எரிபொருள் விலைச்சூத்திரத்தை அன்று விமர்சித்தவர்கள், இன்று அதனை வரவேற்கின்றனர். சத்தியத்தை அசத்தியமாக்கியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. அது போன்றே நாட்டையும் ஆட்சி செய்கின்றது.
கடந்த இரண்டு வருட ஆட்சியில், அரசின் நிர்வாகத் திறனைப் பார்க்கும்போது மக்களுக்காக இந்த அரசு பணியாற்றவில்லை என்பது புலனாகின்றது.
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் குடும்ப ஆட்சியை மையப்படுத்தியே இந்த அரசு செயற்பட்டுள்ளதுடன் மக்கள் சார்பாகச் செயற்பட்டமைக்கான சான்றுகளைப் பார்க்க முடியவில்லை. நியாயமற்ற முறையிலேயே அரசு தற்போது ஆட்சி செய்து வருகின்றது” – என்றார்.