இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு!!

Jaffna university

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.

பேராசிரியர் எஸ். ரகுராம் அவர்கள் தற்போது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், வளாகத்தின் பதில் முதல்வராகவும் அவர் கடமையாற்றியிருக்கிறார்.

இவர் தனது கலாநிதிப் பட்டத்தை கொமன்வெல்த் புலமைப்பரிசிலுடன் அபிவிருத்தித் தொடர்பாடல் துறையில் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – இந்தியாவிலும், முதுகலைமாணிப் பட்ட மேற்படிப்பை இதழியியல் மற்றும் வெகுசனத் தொடர்பாடலிலும், காட்சித் தொடர்பாடலில் இளவிஞ்ஞானமாணிப் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் லொயாலோ கல்லூரியிலும் பெற்றவர். தனது இளவிஞ்ஞானமாணி கற்கையின் போது பல்கலைக்கழகத்தின் முதன்நிலை மாணவராகத் தங்கப் பதக்கத்ததைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்படத்தக்கது.

கல்விசார் வாழ்விற்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒரு பல்துறைசார் ஊடகவியலாளராகவும் அவர் முக்கிய பல பொறுப்புக்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறைகளில் பத்து வருடங்களுக்கும் அதிகமாக வகித்திருக்கிறார்.

“ஈழநாதம்” மற்றும் கிழக்கிலிருந்து வெளிவந்த “தினக்கதிர்” ஆகிய நாளிதழ்களின் செய்தி ஆசிரியராகவும், மஹாராஜா தொலைக்காட்சிச் சேவையில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், யாழ்ப்பாணத்தின் “நமது ஈழநாடு” நாளிதழின் பிரதம ஆசிரியராகவும், “யாழ். தினக்குரலின்” ஆசிரியராகவும், அவரது பணி அமைந்திருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியிலான வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்தின் தகவல், கல்வி மற்றும் தொடர்பாடல் நிபுணராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். கல்வித்துறைசார் பங்களிப்புடன், தனது விசேடத்துவ துறைகளில் ஆலோசகராகவும் வளவாளராகவும் பங்களிப்பு செய்யும் பேராசிரியர் சி.ரகுராம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் குறித்த தேசிய மற்றும் பிராந்திய மட்டக் குழுக்கள் பலவற்றிலும் அங்கத்தவராக இருப்பதுடன், ஊடக மற்றும் தேசிய அபிவிருத்தி பற்றிய ஆய்வுகள் மற்றும் கற்கைகளிலும் அதிக கரிசனை கொண்டவராவார்.

Related Articles

Leave a Reply

Back to top button