பாடசாலை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான டிவிசன் 3 பிரிவு A இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் சம்பியனாக யாழ். மத்தியக் கல்லூரி முடிசூடியுள்ளது.
கொழும்பு சென். ஜோசப்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியை, யாழ். மத்தியக் கல்லூரி அணி எதிர்கொண்டு விளையாடியது.
இந்தப் போட்டியில் ரஞ்சித்குமார் நியூட்டனின் அபார துடுப்பாட்டம், சுதர்சன் அனுசாந்த் மற்றும் விக்னேஷ்வரன் பருதி ஆகியோரின் அற்புத பந்துவீச்சின் உதவியுடன் முதல் இன்னிங்ஸ் வெற்றியை மத்தியக் கல்லூரி தக்கவைத்துக்கொண்டு, சம்பியனாகவும் மகுடம் சூடியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தேர்வுசெய்த யாழ். மத்தியக் கல்லூரிக்கு நியூட்டன் மற்றும் ஜெகதீஷ்வரன் விதுசன் ஆகியோர் நல்ல ஆரம்பம் ஒன்றை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக 80 ஓட்டங்கள் பகிரப்பட விதுசன் 32 ஓட்டங்களுடனும், நியூட்டன் அரைச்சதம் கடந்து 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் நியூட்டனின் சிறந்த பிரகாசிப்புக்கு மத்தியில் 133 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்திருந்த மத்தியக் கல்லூரி அணி அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தடுமாறியது. இதற்கிடையில் சுதர்சன் அனுசாந்த் 32 ஓட்டங்களையும், நிசாந்தன் அஜய் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஓரளவு துடுப்பாட்டத்தில் மத்தியக் கல்லூரி பலம் பெற்றது.
மேற்குறித்த இந்த துடுப்பாட்ட பங்களிப்புகளுடன் 45.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் விஷ்வ பீரிஸ் 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மத்தியக் கல்லூரி அணி ஓரளவு மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருந்த போதும், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் துடுப்பாட்ட வரிசை இந்த தொடரில் பலமிக்கதாக பார்க்கப்பட்டது.
எனினும் மத்தியக் கல்லூரி அணி பந்துவீச்சில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திவந்திருந்த நிலையில், சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது. சொனால் நெத்மினவின் அரைச்சதத்தின் (59 ஓட்டங்கள்) உதவியுடன் முதல் விக்கெட்டுக்காக 80 ஓட்டங்களை மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி குவித்த போதும், அடுத்தடுத்த விக்கெட்டுகளை சீரான இடைவெளிகளில் மத்தியக் கல்லூரி வீழ்த்த தொடங்கியது.
அனுசாந்த் அற்புதமாக பந்துவீசி அழுத்தம் கொடுக்க, மறுமுனையில் பருதியும் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க தவறவில்லை. அனுசாந்த் 5 விக்கெட்டுகளையும், பருதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த மாரிஸ் ஸ்டெல்லா அணி தடுமாற்றத்தை வெளிப்படுத்தி 181 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்ற மத்தியக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் வேகமான ஓட்டக்குவிப்பை காட்டியிருந்தும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிக்கப்பட்டன.
அணித்தலைவர் ஆனந்தன் கஜன் 45 பந்துகளில் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக விளாச, தகுதாஸ் அபிலாஷ் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்று அரைச்சத வாய்ப்பை தவறவிட்டார். அதுமாத்திரமின்றி சதாகரன் சிமில்டன் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணி 42.4 ஓவர்கள் நிறைவில் 216 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய விஷ்வ பீரிஸ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காண்பித்தார்.
இந்தநிலையில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் 259 ஓட்டங்களை மத்தியக் கல்லூரி வெற்றியிலக்காக நிர்ணயிக்க, இன்றைய ஆட்டநேர நிறைவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களை பெற, போட்டி சமனிலையில் நிறைவுசெய்யப்பட்டது.
எனவே இறுதிப்போட்டி சமனிலையாக முடிவடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் மூலம் யாழ். மத்தியக் கல்லூரி அணி வெற்றிபெற்று டிவிசன் 3 பிரிவு A சம்பியனாகவும் முடிசூடியது.
சுருக்கம்
யாழ். மத்தியக் கல்லூரி – 223/10 (45.4), நியூட்டன் 82, விதுசன் 32, அனுசாந்த் 32, பீரிஸ் 72/6
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 181/10 (66.5), சொனால் 59, சவிந்து பெரேரா 32, அனுசாந்த் 38/5, பருதி 61/3
யாழ். மத்தியக் கல்லூரி – 216/10 (42.4), கஜன் 62, அபிலாஷ் 46*, சிமில்டன் 40, பீரிஸ் 82/7
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 60/2 (17), சவிந்து 18*, வினில பெரேரா 18*, கஜன் 7/1, பருதி 26/1
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றி பெற்றது.
யாழ் பிரதேச செய்தியாளர் போஸ்கோ