கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் ஏற்பட்ட ஹிஜாப் சர்ச்சை, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.
ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றில் தொடர்ந்த வழக்கை அடுத்து, இறுதி உத்தரவு வரும் வரை பாடசாலைகள், கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பாடசாலைகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் விஜயபுராவில் உள்ள கல்லூரியொன்றில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வருகைதந்துள்ளனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை உள்நுழைய அனுமதிக்கவில்லை.
இதனால், குறித்த மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதேபோல், மேலும் சில கல்லூரிகளுக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்களும் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் கர்நாடகாவின் ஒரு சில கல்லூரிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.