இந்தியாசெய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதியுங்கள் – மு.க. ஸ்டாலின்!!

india

நேற்றைய தினம் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘என்றுமில்லாதவாறு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும்’ என வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

அச்சந்திப்பின் போது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வழங்கிவைத்துள்ளார். அதில், இலங்கை தமிழர்கள் தொடர்பான கோரிக்கையும் அடங்கியிருந்தது.

இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. இனப்படுகொலை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழர்களின் வருகை அதிகமாகியது. அந்த வகையில் 1983ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம், சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை அறிவுறுத்த வேண்டும். அதுவுமல்லாமல் இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே இலங்கையில் உள்ள தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் 4 மாத கைக்குழந்தை உட்பட 16 பேர் தமிழக கடலோரத்தை வந்தடைந்தனர். அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத சூழ்நிலையில் மிக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு அவர்கள் வந்து சேர்ந்தனர்.

தற்போது அவர்கள் ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள நிரந்தர முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள மிக மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக மேலும் பலர் தமிழகத்திற்கு வரக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்தச் சூழ்நிலை கருதி, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக தமிழ் பெண்கள், குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை வழங்க தமிழக அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது.

எனவே இந்த கருணை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசாங்கத்துக்கு தேவையான அனுமதியை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமது மனுவில் கேட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button