இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி மாற்றத்தால் இலங்கையில் எவ்வித பலனும் இல்லை – மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!!

Human Rights

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தமது சர்வதேச அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வீதிகளில் இறங்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலமாக பாரதூரமான உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை மாதம் பதவி விலகினார்.

எனினும், புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, பெரும்பாலும் அமைதியான போராட்டங்களை ஒடுக்கினார்,

மனித உரிமை செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததுடன், கடந்தகால மீறல்களுக்கான, நீதிக்கான கோரிக்கைகளை புறக்கணித்தார் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அழைப்புகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையுடன் பதிலளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க உதவ வேண்டிய வெளிநாட்டு பங்காளிகள், அடிப்படை மனித உரிமை சீர்திருத்தங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின்கீழ், இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் கடப்பாடுளுக்கு இணங்க வேண்டும் என வலியுறுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

எனினும் உறுதியான முன்னேற்றத்தைப்பெற, அழுத்தம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டத்திற்கான உரிமையை மதிக்க வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் அழைப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

712 பக்கங்களைக்கொண்ட, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், 100 நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button