சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் (09) அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஏப்ரலில், கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த திங்கட்கிழமை (07) எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்குமாறு, புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த 2020 ஏப்ரல் 14ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் CID யினரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு பின்னர், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.