மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழைபெய்து வருகின்ற நிலையில் பெரும்பாலான தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தாள்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிங்பதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள கற்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு, எருவில் பகுதியில் தேங்கிநிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு மண்முனை தென் எருவில் பிரதேச சபையினர் பெக்கோ இயந்திரத்துடன் குறித்த இடத்திற்கு வியாழக்கிழமை(03) வருகை தந்திருந்தனர். எனினும் வெள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பில் பட்டிருப்பு மற்றும் எருவில் கிராம மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. அவ்விடத்திற்கு வருதை தந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், கிராம சேவை உத்தியோகஸ்த்தர், களுவாஞ்சிகுடி பொலிசார் விஜயம் செய்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இறுதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து இரு கிராமத்தவர்களுடனும் கலந்துரையாடி மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் வெள்ள நீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதற்கிணங்க பிரதேச சபையினரால் வெள்ளநீர் வட்டி வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய தென்னை மரம் ஒன்று எருவில் கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் வீழ்ந்துள்ளதில் அவ்வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் – சக்தி