இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹசரங்கவின் சாதனை
2021 டி-20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க புதிய சாதனை படைத்துள்ளார்.
நடப்பு டி-20 உலகக் கிண்ணம் இதுவரை வனிந்து ஹசரங்கவுக்கு சிறப்பாக இருந்துள்ளது.
இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்க தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் ஐ.சி.சி. டி-20 உலக கிண்ணத்தில் ஹெட்ரிக் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதேவேளை நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில், முதல் ஓவரிலேயே ஜேசன் ரோயின் விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து ஜோனி பேர்ஸ்டோவும் ஹசரங்கவின் அடுத்த ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த விக்கெட் எடுப்பின் மூலம் ஹசரங்க 2021 இல் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக (33) விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் வனிந்து ஹசரங்க அங்கம் வகித்தார்.
ஆனால் அவரால் 2 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.
எனினும் டி-20 உலகக் கிண்ணத்தில் அவர் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ளது.
இதனிடையே நேற்றைய ஆட்டத்தில் ஹசரங்க இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கனை ஆட்டமிழக்க செய்து மூன்றாவத விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இது சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அவர் எடுத்த 50 ஆவது விக்கெட் ஆகும்.