அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐக்கியநாடுகள் சபை இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி விடுத்துள்ள செய்தியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இலங்கையில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் த் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதியை காணவும், இழப்பீடுகளை வழங்கவும் குற்றவாளிகளை நீதிக்கு முன்கொண்டு வரவும் இலங்கை அதிகாரிகளை, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறது.
இலங்கை முழுவதிலும் இருந்து காணாமல் போனவர்களின் பல குடும்பங்களை தான் சந்தித்துள்ளதாக ஹம்டி கூறியுள்ளார்.
அவர்களைப் பொறுத்தவரை, காணாமல் போனவர்களின் தலைவிதி குறித்த நிச்சயமற்ற தன்மை, வேதனையான உண்மையாகவே தொடர்கிறது.
அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இடைவிடாமல் பதில்களைக் கேட்கிறார்கள்.
பதில்கள் இல்லாமல், அவர்கள் ஒவ்வொரு நாளும் கஸ்டப்படுகிறார்கள், நம்பிக்கை மற்றும் விரக்திக்கு இடையில் அலைகிறார்கள். உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் தேடலில், அவர்களும் அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்
2015 ஆம் ஆண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் கையொப்பமிட்டதன் மூலம், இலங்கை அந்த திசையில் முதல் அடியை எடுத்தது.
அத்துடன் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதன் சூழ்நிலைகள் தொடர்பான உண்மையை அறியும் குடும்பங்களின் உரிமையைம் அங்கீகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைக்கப்பட்டமையானது, சரியான திசையில் மற்றொரு நடவடிக்கையாகும்,
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களது நம்பிக்கையைப் பெறுவதற்கும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நம்பகமான செயல்முறைகளை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் இன்னும் பல கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி குறிப்பிட்டுள்ளார்.