இலங்கைசெய்திகள்

இலங்கையின் நிலைப்பாடு குறித்து,உலகத் தமிழர் பேரவை!!

global tamil forum

இலங்கையின் தற்போதைய சிந்தனை மற்றும் தடைப்பட்டியலில் பெயர்கள் மற்றும் அமைப்புகள் நீக்கப்பட்டமை தொடர்பில் உலகத்தமிழர் பேரவை கருத்து தெரிவித்துள்ளது.

பல்வேறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி ஆட்கள் இலங்கையின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

இலங்கையில் மேம்பட்ட இன உறவுகளையும் பொருளாதார விளைவுகளையும் அடைவதற்கான முக்கியமான படியாக இதனை கருதலாம் என்று பேரவை கருதுகிறது.

எனினும் 2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனி ஆட்கள் இன்னும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் காலத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பட்டியலிடுதல் மற்றும் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற ஒரு குழப்பமான செயல்முறையை நிறுத்துமாறு உலக தமிழர் பேரவை இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான முழு செயல்முறையும் தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குமுறையை முற்றிலும் துஷ்பிரயோகம் செய்வதாகும் என்று பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கும், மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துவதற்கும் அரசாங்கத்தால் தவறாக இந்த பட்டியல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உண்மையில், நவம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் அமெரிக்காவில் நடந்த முக்கியமான சந்திப்புகள், பொதுநலவாய மற்றும் ஐக்கிய நாடுகள், தெற்காசியாவின் வெளியுறவுத்துறை, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் சந்திப்புக்களின்போது இலங்கை அரசாங்கத்தின் தடைகள் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

எனினும் இலங்கையில் நல்லிணக்கம், புனர்வாழ்வு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் இந்த தடையின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் எட்டாவது தடவையாக அடுத்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவு மீளாய்வு செய்யப்படவுள்ள நிலையில், இலங்கையின் நற்சான்றிதழ்களை வலுப்படுத்துவதற்காகவே இந்த தடைப்பட்டியல் நீக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

இந்தநிலையில் 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் உண்மையில் இலங்கை முன்னேறுவதற்கும் மிகவும் முக்கியமானது என்று லண்டனைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்பான உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் செயற்பாடு மிகவும் பின்தங்கியதாக இருந்து வருகிறது.

காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்ற சில முன்முயற்சிகள் இருந்தபோதிலும்,போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள நிவாரணம், நீதி மற்றும் மூடல் ஆகியவற்றை வழங்கும் எந்தவொரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தையும் நாடு இன்னும் அடையவில்லை.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக, இலங்கை தனது பொருளாதார சிக்கல்களை முன்னிலைப்படுத்திய எந்தவொரு வாதமும் சட்ட, தார்மீக அல்லது அரசியல் அடிப்படையை கொண்டிருக்கவில்லை என்றும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் முற்போக்கான மாற்றங்களுக்காக கிளர்ந்தெழுந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சில நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இவையனைத்தும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பை அதிகரிப்பதற்கே வழியேற்படுத்தியுள்ளன எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button