நாட்டில் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் 42 வருடங்கள் பழமையான சட்டம் எனவும் திருத்தம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இந்த நாட்டின் சுயமரியாதையையும் பெருமையையும் பாதுகாத்துக்கொண்டு வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். ஐக்கிய நாடுகள் சபைக்கு நாங்கள் தொடர்ந்து தகவல்களை வழங்குகிறோம். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளனர். அவர்களுக்கு மறைக்க எதுவும் இல்லை. மனித உரிமைகள் பேரவையையும் உயர்ஸ்தானிகரையும் வரவேற்கிறோம்.
ஆனால் ஒன்றை நாங்கள் ஏற்கவில்லை. அதாவது இலங்கையை பின்தொடர்ந்து எமது நாட்டுக்கு எதிரான சாட்சியங்களை தேடுவதற்கும் சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கையை முன்னிறுத்துவதற்கும் இலங்கையை தயார்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட விசேட பொறிமுறையானது இலங்கைக்கே உரித்தான தனித்துவமான பொறிமுறையாகும். அதை நாங்கள் ஏற்கவில்லை.
நாங்கள் அவர்களுடன் சரியானதைச் செய்கிறோம். செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது அமர்வில் இலங்கைக்கு எதிராக 120 000 சாட்சியங்கள் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். அந்த ஆதாரம் என்ன? அந்த ஆதாரம் எங்கிருந்து வந்தது? இயற்கை சட்டத்தின் படி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில விஷயங்களைச் செய்கிறோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் 42 வருடங்கள் பழமையானது. அந்த மசோதாவை திரும்பப் பெற நாங்கள் தயாராக இல்லை. நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அச்சுறுத்தல்களால் நாங்கள் முடிவுகளை எடுப்பதில்லை. 4 தசாப்தங்களுக்கும் மேலாக பழமையான சட்டத்தை திருத்த வேண்டும் என்பதை இந்த சபையில் உள்ள அனைவரும் கட்சி பேதமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். அந்த நான்கு தசாப்தங்களில் நமது சமூகம் பல வழிகளில் மாறிவிட்டது. எனவே அந்த திருத்தங்கள் விரைவில் இந்த சபையில் சமர்ப்பிக்கப்படும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.