கணக்காய்வு விசாரணைகளிலிருந்து ஏறாவூர் நகர சபையை விடுவிக்க வேண்டும் ஏறாவூர் நகர சபையின் 45வது கூட்டத் தொடரில் ஏகமனதான தீர்மானம்.
நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழு, மத்திய கணக்காய்வுக் குழு ஆகியவற்றில் ஏறாவூர் நகர சபைக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாக இடம்பெறுகின்ற முறைப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஏறாவூர் நகர சபையை விசாரணை பட்டியலிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அச்சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை 30.12.2021 ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்ற அச்சபையின் 45வது அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர சபையின் நவீன கட்டிடம் அதன் அருகிலமைந்துள்ள நவீன நூலகத்துக்கான கட்டிடம் ஆகியவற்றின் நிர்மாண வேலைகளில் ஊழல்கள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழு, மத்திய கணக்காய்வுக் குழு ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக அந்த நவீன கட்டிட நிருமாணப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு ஏறாவூர் நகர சபையினால் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் செய்ய முடியாத சூழ்நிலையுள்ளது.
எனவே இந்த இக்கட்டான நெருக்கடி நிலையிலிருந்து ஏறாவூர் நகர சபையை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் ஏறாவூர் நகர சபைக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்க உடனடியாக வழிவகை கண்டாகப்பட வேண்டும்.
முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டதுபோன்று ஏறாவூர் நகர சபைக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதனை வருடக்கணக்கில் இழுத்தடிக்காது உடனடியாக கண்டறியுமாறும் ஏறாவூர் நகர சபை கேட்டுக் கொள்கின்றது.
கோப் குழு விசாரணை என்ற பெயரில் இருக்கும் ஏறாவூர் நகர சபையின் நாமம் ஏறாவூரின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்குமே பெருந் தடையாக இருந்து வருகின்றது.
எனவே, இந்த விடயம் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செய்தியாளர் – வ.சக்திவேல்