இலங்கைசெய்திகள்

ஏறாவூரில் வெளியூர் வர்த்தகர்களினால் பெரும் பாதிப்பு – தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள்!!

Eravur

செய்தியாளர் – சக்தி

ஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் ஊடுருவி வர்த்தகத்தை மேற்கொள்ளும் வெளியூர் வர்த்தகர்களால் உள்ளுர் வர்த்தக சமூகம் வெகுவாகப் பாதிக்கப்படடிருப்பதாகவும் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஏறாவூர் நகர வர்த்தகர்கள் சங்கத்தினால் ஏறாவூர் நகர சபை நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளிம் தலைமையில் வியாழக்கிழமை 27.01.2022 இடம்பெற்ற ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் கவனத்திற்கு இந்த விடயம்கொண்டு வரப்பட்டது.

ஏறாவூர் வர்த்தகர்களால் ஏறாவூர் நகர சபைத் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கடந்த சில வருடங்களாக ஏறாவூர் பிரதேச வர்த்தகர்களது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் வெளிப்பிரதேசங்களில் உள்ளவர்கள் ஏறாவூர் நகர பிரதேச கடைத்தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களை மிகக் கூடிய விலை கொடுத்து கொள்வனவு செய்வதுடன் மிகக் கூடிய விலைக்கும் வர்த்தக நிலையங்களை வாடகைக்குப் பெற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே பொருளாதார வளம் கொண்ட அந்த வெளியூர் வர்த்தகர்களின் நடவடிக்கைகளால் பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த உள்ளுர் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

சமீப சில நாட்களில் ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியொன்றில் வெளியூர் வர்த்தகர் ஒருவரினால் மோட்டார் வாகன வர்த்தக நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஏறாவூர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த 25 இற்கு மேற்பட்ட உள்ளுர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் வர்த்தகர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளால் பிரதேச முரண்பாடுகளும் உள்ளுரில் அமைதியின்மையும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. எனவே இந்த விடயம் குறித்து ஏறாவூர் நகர சபை நிருவாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மாதாந்த சபை அமர்வில் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஏறாவூர் நகர சபை இந்த விடயத்தில் கடைசியாக சர்ச்சைக்குள்ளான நிலையில் உள்ளுர் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்படும் வர்த்தக நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை இந்த முரண்பாட்டு விடயம் சுமுகமாகத் தீர்க்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதென தீர்மானமெடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button